கோப்புப்படம் 
தமிழகம்

சூளையில் ஜெயின் கோயில் அருகில் உள்ள இறைச்சிக் கடையை அகற்றக்கோரிய மனு தள்ளுபடி

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை சூளை மேடாக்ஸ் தெருவில் ஜெயின் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயிலுக்கு அருகில் ஒரு இறைச்சிக் கடை அமைந்துள்ளது. இறைச்சிக் கடையை அகற்றக்கோரி ஜெயின் கோயில்நிர்வாகம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘சென்னை சூளை மேடாக்ஸ் தெருவில் உள்ள ஜெயின் கோயிலில் மகாவீரரை வழிபடும் ஜெயின் சமூகத்தினர் வழிபாடு நடத்தி வருகிறோம்.

இந்தக் கோயிலுக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் வருகை தந்து தியானம் மேற்கொள்கின்றனர். இந்தக்கோயிலுக்கு வரும் வழியில் இறைச்சிக்கடை ஒன்று உள்ளது.

மாமிசம் உண்ணாத ஜெயின் சமூகத்தினர் அந்த வழியாக கோயிலுக்கு வரும்போது முகம் சுளிக்கவேண்டியுள்ளதால், அந்த இறைச்சிக் கடையை அகற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோயிலுக்கு அருகில் இறைச்சிக்கடை இருக்கக்கூடாது என எந்த சட்டமோ, விதிகளோ இல்லாத போது நீதிமன்றம் எப்படி அவ்வாறு உத்தரவிடமுடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதையடுத்து இந்தவிவகாரம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளை அணுகுவதாக தெரிவித்த மனுதாரர் தரப்பு, வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்தது. அதையடுத்து இந்த மனுவை வாபஸ் பெற அனுமதித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்தனர்.

SCROLL FOR NEXT