ஆளுநர் ரவி | கோப்புபடம் 
தமிழகம்

பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்துவைக்க முதல்வர் கடிதம்: ஆளுநர் ரவி 3 நாள் டெல்லி பயணம்

செய்திப்பிரிவு

சென்னை: பொன்முடி எம்எல்ஏவாக நீடிக்கும் நிலையில், அவருக்கு மார்ச் 13-ம் தேதி (நேற்று) மாலை அல்லது 14-ம் தேதி (இன்று) காலையில் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்குமாறு, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

இக்கடிதத்தை ஆளுநர் பரிசீலித்து, அதன்பிறகு பதவியேற்பு குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று தகவல் வெளியானது. இதற்கிடையே, திருப்பூர் சென்றிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று இரவு 7.45 மணி அளவில் சென்னை திரும்பினார். இந்நிலையில், ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட பயண திட்டப்படி, ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 5.50 மணிக்கு புறப்பட்டு டெல்லி செல்கிறார். மீண்டும் 16-ம் தேதிதான் தமிழகம் திரும்புவதாக அவரது பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திட்டமிட்டபடி, ஆளுநர் ரவி டெல்லி செல்வாரா, அல்லது பயணத்தை ரத்து செய்துவிட்டு அமைச்சராக பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பாரா என்பது அவரது தனிப்பட்ட முடிவை பொருத்தது என்று ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

பொன்முடி வகித்த உயர்கல்வி துறை, தற்போது ராஜகண்ணப்பனிடம் உள்ளது. பொன்முடி அமைச்சராகும் பட்சத்தில், அவருக்கு மீண்டும் அதே துறை வழங்கப்படலாம் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

SCROLL FOR NEXT