சென்னை: தமிழகத்தின் தினசரி மின்தேவை குறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் ஆண்டுதோறும் மின்நுகர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டு 3.24 கோடியாக இருந்த மின்நுகர்வோரின் எண்ணிக்கை 2023-ம் ஆண்டில் 3.31 கோடியாக அதிகரித்துள்ளது. அத்துடன், தொழிற்சாலை மின்இணைப்புகளும் அதிகரித்து வருகின்றன.
இதனால், தினசரி மின்தேவையும் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு கோடையில் தினசரி மின்தேவை மிக அதிகபட்சமாக 20,744 மெகாவாட் அளவு வரை அதிகரிக்கும் என தென்மண்டல மின்சார குழு கணித்துள்ளது.
கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் தினசரி மின்தேவை ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் தினசரி மின்தேவை சராசரியாக 15 ஆயிரம் மெகாவாட்டாக இருந்தது.
இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாகவும் மின்தேவை அதிகரிக்கக் கூடும். எனவே, கோடையில் மின்தடை ஏற்படாமல் தடுக்க மின்வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பரிமாற்ற அடிப்படையில் மின்சாரம் கொள்முதல் செய்யப்படும். அதன்படி, கொள்முதல் செய்யப்படும் மின்சார அளவுக்கு ஏற்ப காற்றாலை மின்சாரம் உற்பத்தி தொடங்கியவுடன் திருப்பி அளிக்கப்படும்.
மேலும், காலை மற்றும் மாலை வேளைகளில் ஏற்படும் மின்தேவையைச் சமாளிக்க தனியார் மின்னுற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.