சென்னை: கடல்நீரை குடிநீராக்கும் நிலைய பிரதான குடிநீர் உந்து குழாய் இணைப்பு பணி காரணமாக தென் சென்னை மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சில இடங்களில் நாளை குடிநீர் விநியோகம் பாதிக்கும்.
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நெம்மேலியில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பிரதான குடிநீர் உந்துகுழாய்கள் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் நாளை (மார்ச் 15) பிற்பகல் 2 மணி முதல் நாளை மறுநாள் அதிகாலை 2 மணி வரை தென் சென்னை மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கும்.
குறிப்பாக வளசரவாக்கம் மண்டலத்தில் நந்தம்பாக்கம், வளசரவாக்கம், நொளம்பூர், ராமாபுரம், ஆலந்தூர், அடையாறு மண்டலத்தில் வேளச்சேரி, பெருங்குடி மண்டலத்தில் பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், உள்ளகரம்- புழுதிவாக்கம், தாம்பரம் மாநகராட்சியில் பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், ராதா நகர் ஆகிய இடங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கும்.
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in/ என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.
குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.