சென்னை: சென்னையில் உள்ள கிண்டி கோல்ப் மைதானத்துக்கான குத்தகை வாடகை பாக்கியாக ரூ.119.78 கோடியை செலுத்த வேண்டுமென காஸ்மோபாலிட்டன் கிளப்புக்கு கிண்டி வட்டாட்சியர் பிறப்பித்த நோட்டீஸை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
சென்னை மாம்பலம் - கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்துக்குட்பட்ட, அரசுக்கு சொந்தமான 77.70 ஏக்கர் நிலம் கடந்த 1933, 1935-ம் ஆண்டுகளில் கோல்ப் மைதானம் அமைப்பதற்காக அப்போதைய மெட்ராஸ் மாகாண அரசால் காஸ்மோபாலிட்டன் கிளப்புக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 1971-1996 காலகட்டத்தில் குத்தகை வாடகை பாக்கியாக ரூ.119.78 கோடியை செலுத்தவில்லை எனக்கூறி அந்த கிளப்புக்கு மாம்பலம் - கிண்டி வட்டாட்சியர் கடந்த 2004-ம் ஆண்டு நோட்டீஸ் பிறப்பித்தார்.
இந்த நோட்டீசை எதிர்த்து காஸ்மோபாலிட்டன் கிளப் சார்பில் கடந்த 2004-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அந்த குத்தகை பாக்கித்தொகையை 2015 மே 31-ம் தேதிக்குள் ரூ.25 கோடியை செலுத்த வேண்டுமென உத்தரவிட்டிருந்தார்.
மேலும், வாடகை வசூல் தொடர்பாக நோட்டீஸ் பிறப்பித்து உரிய விசாரணை மேற்கொண்டு, சரியான குத்தகை வாடகை பாக்கியை நிர்ணயிக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தார்.
இதை எதிர்த்து காஸ்மோபாலிட்டன் கிளப் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், குத்தகை தொகையை நிர்ணயம் செய்யும் அதிகாரம் அரசுக்கு மட்டுமே உள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரோ, வட்டாட்சியரோ குத்தகை வாடகை பாக்கியை செலுத்தவில்லை என நோட்டீஸ் பிறப்பிக்கவோ அல்லது குத்தகை வாடகையை உயர்த்தவோ அவர்களுக்கு அதிகாரம் கிடையாது.
எனவே கோல்ப் மைதானத்தின் குத்தகை வாடகை பாக்கியாக ரூ.119.78 கோடியை செலுத்த வேண்டுமென காஸ்மோபாலிட்டன் கிளப்புக்கு வட்டாட்சியர் பிறப்பித்துள்ள நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டுள்ளனர்.