நாகர்கோவில்: பிரதமர் மோடி நாளை வரும் நிலையில் கன்னியாகுமரியில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மக்களவைத் தேர்தலில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு திரட்டும் வகையில் பிரதமர் மோடி நாளை ( 15-ம் தேதி ) கன்னியாகுமரி வருகிறார். அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். நாளை காலை 11 மணியளவில் திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரி வரும் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பாஜகவினர் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. ஆரோக்கிய புரம் முதல் நீரோடி வரை கடற்கரை பகுதிகளில் மெரைன் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தங்கும் விடுதிகள், ஓட்டல்களுக்கு வரும் வெளியூர் நபர்கள் குறித்த விவரங்களை உடனுக்குடன் தெரிவிக்க போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். டெல்லியில் இருந்து வந்துள்ள பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம் மற்றும் சுற்றுப் புற பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.
திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ் குமார் தலைமையில், குமரி மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் பங்கேற்று பேசும் பொதுக்கூட்ட மேடைக்கான பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நேற்று அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ, மாநில செயலாளர் மீனா தேவ், முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி, மாவட்ட தலைவர் தர்மராஜ், மாநில மகளிரணி செயலாளர் உமாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், எஸ்பி சுந்தர வதனம் மற்றும் அதிகாரிகள் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பிரதமர் பேசும் மேடை முன்புபிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.