நாகர்கோவில்: தமிழகத்தில் திமுக கூட்டணியை மிஞ்சும் வகையில் பாஜக கூட்டணி அமைந்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மக்களவை தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் வெற்றிபெறும். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பிரச்சாரம் செய்வதற்காக பிரதமர் மோடி நாளை வருகிறார். பிரதமர் வருகையின் மூலம் கன்னியாகுமரி தொகுதியின் வெற்றி உறுதியாகும். வரும்18-ம் தேதி சேலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும், 19-ம் தேதி கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் பிரதமர் கலந்துகொள்கிறார்.
சமத்துவ மக்கள் கட்சி பாஜகவுடன் இணைந்ததை வரவேற்கிறேன். மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வர வேண்டும் என்று ஆதரவு தெரிவிக்கும் அனைத்து கட்சியினரையும் நாங்கள் வரவேற்கிறோம். தமிழகத்தை பொறுத்த வரையில் திமுகவை மிஞ்சும் வகையில் பாஜக கூட்டணி அமைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக கோடிக் கணக்கான திட்டங்களை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்துள்ளார்.
எனவே, ‘மீண்டும் மோடி, வேண்டும் மோடி’ என்ற கொள்கையின் அடிப்படையில் தேர்தலை சந்திக்க உள்ளோம். விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் பாஜக சார்பில் விஜயதரணி போட்டியிடுவாரா? என்பது குறித்து தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தலைமை முடிவு செய்யும் என்றார் அவர்.