ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து மைசூரு செல்லும் சாலை திம்பம் வழியாகச் செல்கிறது. 27 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட இந்த சாலையில், வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் தொடர்கின்றன.
இந்நிலையில், நேற்று காலைசத்தியமங்கலத்தில் உள்ள சர்க்கரை ஆலைக்கு, கரும்பு ஏற்றிய லாரி சென்று கொண்டு இருந்தது. 27-வது கொண்டை ஊசி வளைவில் லாரி செல்லும்போது, திடீரென எதிரே வந்த கார் மீது மோதியது. இதில், கார் மீது கரும்புகள் சரிந்ததுடன், லாரியும் கவிழ்ந்தது. காரில் பயணித்த 6 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கினர். அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் ஈரோடு மாவட்டம் நம்பியூரைச் சேர்ந்த குமார்(60), கஞ்சநாயக்கனூர் செல்வம்(50), இண்டியம்பாளையம் சின்னையன் (55) ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பலத்த காயமடைந்த சவுந்தர்ராஜ் (60), செல்வம் (63), மனோகர் (59) ஆகியோர் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.