நாமக்கல் எம் .பி ஏ.கே.பி சின்ராஜ் 
தமிழகம்

மணல் கடத்தல் வழக்கு விவகாரம்: நாமக்கல் எம்.பி காவல் நிலையத்தில் தர்ணா

கி.பார்த்திபன்

நாமக்கல்: மணல் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றாவாளிகளை கைது செய்யக் கோரி நாமக்கல் மக்களவைத் தொகுதி எம் பி சின்ராஜ் காவல் நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாமக்கல் மக்களவைத் தொகுதி எம்.பி ஆக ஏ.கே.பி சின்ராஜ் உள்ளார். இவர் இன்று (செவ்வாய்க் கிழமை) காலை பரமத்திவேலூர் காவல் நிலைய வளாகத்தில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியபோது பரமத்தி வேலூர் அடுத்த மணப்பள்ளியில் நேற்று இரவு காவிரி ஆற்றில் மணல் கடத்தல் சம்பவம் நடைபெற்றது. இதில் நான்கு பேர் பிடிபட்டனர். எனினும் இருவர் மட்டுமே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மற்ற இருவர் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் துணை கண்காணிப்பாளர் சங்கீதா தலைமையிலான காவல்துறையினர் உறுதி அளித்தனர். தொடர்ந்து மற்ற இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து எம்.பி சின்ராஜ் போராட்டத்தை விலக்கிக் கொண்டார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே மணல் கடத்தல் வழக்கில் பிடிபட்ட மற்ற இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.

SCROLL FOR NEXT