தமிழகம்

“எரிச்சலில் எதிர்க்கட்சிகள்” - ஏ.சி.எஸ். விமர்சனம்

செய்திப்பிரிவு

புதிய நீதிக்கட்சியின் மாநிலத் தலைவர் ஏ.சி. சண்முகம் ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் தொடர்ச்சியாக தமிழகத்துக்கு வருவது எதிர்க்கட்சிகளுக்கு எரிச்சலையும், தோல்வி பயத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்துக்கு வரும்போதெல்லாம், பிரதமர், பல கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளார். மத்திய அரசு மற்றும் அண்டை மாநிலங்களுடன் திமுக சுமுகமான உறவைப் பேணியிருந்தால், தமிழகம் பல திட்டங்களைப் பெற்றிருக்கும், மேகேதாட்டு, பாலாறு அணைத் திட்டங்களைத் தடுத்திருக்க முடியும்.

தற்போது கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனையால், தமிழக இளைஞர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது. ஏற்கெனவே டாஸ்மாக் கடைகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், திமுகவும், அதிமுகவும் அவர்கள் ஆட்சியின் தவறுகள் காரணமாக, மாறி மாறி ஆட்சிக்கு வந்தனர்.

இப்போது, மாநிலத்தின் வளர்ச்சியை பல மடங்கு உறுதிசெய்யக்கூடிய அளவுக்கு, அவர்களுக்கு மாற்றாக பாஜக தமிழகத்தில் வளர்ந்துள்ளது. எனவே பாஜக கூட்டணி 40 தொகுதிகளையும் வெல்லும் என்றார்.

SCROLL FOR NEXT