சென்னை: பிறந்து சில நிமிடங்களே ஆன குழந்தை குப்பைத் தொட்டி அருகே வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை திருவல்லிக்கேணி குலாம் மிர்சா சாலையில் தனியார் தங்கும் விடுதி அருகே குப்பை தொட்டி ஒன்று உள்ளது. அந்த குப்பைத் தொட்டி அருகே, பிறந்துசில நிமிடங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று நேற்று அதிகாலை ரத்தக் கரையுடன் இருந்துள்ளது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தங்கும் விடுதி ஊழியர்கள், இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் சம்பவ இடம் விரைந்து முதல்கட்டமாக குழந்தையை மீட்டு திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். பின்னர் விசாரணை நடத்தப்பட்டது.
இதில், இரு தினங்களுக்கு முன்பாக விடுதியில் தங்கியிருந்த மதுரையைச் சேர்ந்த பார்வை மாற்று திறனாளியின் 17 வயதுசிறுமிக்குக் குழந்தை பிறந்தது தெரியவந்தது. அந்த சிறுமியைக் காதலித்து திருமணம் செய்துகொள்வதாகக் கூறி மதுரையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ஏமாற்றியுள்ளார். அதனால் அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார்.
இந்நிலையில்தான், சிகிச்சை மேற்கொள்வதற்காகத் தனது 17 வயது மகளுடன் சென்னை வந்தபார்வை மாற்றுத்திறனாளி தந்தை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கி இருந்துள்ளார்.
நேற்று அதிகாலை சிறுமிக்கு விடுதியிலேயே ஆண் குழந்தை பிறந்தவுடன் பயத்தில் குழந்தையை விடுதி அருகில் உள்ள குப்பைத் தொட்டி அருகே வைத்துவிட்டுச் சென்றது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய ஆட்டோ ஓட்டுநரைப் பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.