சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்சிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்
இதுகுறித்து அவர் நேற்றுவெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: குடியுரிமை என்ற மனிதநேயக் கொள்கையை மதம், இனத்தால் வேறுபடுத்தும் பிளவுவாதக் கொள்கையாக மாற்றியது மத்திய பாஜக அரசு.இஸ்லாமிய மதத்தவரையும், இலங்கைத் தமிழரையும் வஞ்சிக்கும் சிஐஏவை இயற்றியது மத்திய பாஜக அரசு.
அதனை திமுக உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் கடுமையாக எதிர்த்தன. ஆனால், பாஜகவின் பாதம் தாங்கியான அதிமுக ஆதரித்து வாக்களித்ததால்தான் அச்சட்டம் நிறைவேறியது.
மக்கள் எதிர்ப்பு காரணமாக அந்தச் சட்டத்தை இதுநாள் வரை அமல்படுத்தாமல் வைத்திருந்தது பாஜக. இந்திய நாட்டின் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் போற்றிப் பாதுகாக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பின்மைக் கோட்பாட்டை நிலை நிறுத்தவும் இந்திய குடியுரிமை திருத்தச்சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசைவலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் கடந்த 2021-ம்ஆண்டு அரசினர் தனித் தீர்மானத்தை நிறைவேற்றினோம்.
மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: இப்போது தேர்தலில் தனது அனைத்து அஸ்திரங்களும் எடுபடாமல் போன நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் கரையேற முயற்சிக்கிறார் பிரதமர் மோடி. தேர்தல் நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளை சீண்டி அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் பிரதமர் மோடி.
அமைதிமிகு இந்தியாவில் பிளவுமிகு சட்டத்தைக் கொண்டுவந்த பாஜகவையும், அந்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுகவையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். தக்க பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.