சென்னை: ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்துக்கு ரூ.14.85 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், திரவ பெட்ரோலிய வாயு (LPG) மூலம் இயங்கும் 500 தேய்ப்பு பெட்டிகள் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டசெய்திக்குறிப்பு: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசைமற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்துக்கு ரூ.14.85 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலி வாயிலாக திறந்துவைத்தார். இந்த புதிய கட்டிடம்,தரை மற்றும் நான்கு தளங்களுடன், 45,800 சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
தேய்ப்பு பெட்டிகள்: பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் சமூக, கல்வி, பொருளாதார மேம்பாட்டுக்காக இத்துறையின் மூலம்பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அவற்றில் சலவைத் தொழிலை மேற்கொள்ளும் ஏழை எளிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, விலையில்லா பித்தளை தேய்ப்புப் பெட்டிகள் (இஸ்திரி பெட்டி) வழங்கும் திட்டமும் ஒன்றாகும். தற்போது மாறிவரும் சூழலுக்கேற்பவும், சுற்றுச்சூழல் நலனை கருத்தில்கொண்டும் புதிய முயற்சியாக திரவ பெட்ரோலிய வாயு (LPG) மூலம் இயங்கும் தேய்ப்புப் பெட்டிகள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு முன்னெடுக்கிறது.
அதன்படி, முதல்கட்டமாக, இந்திய எண்ணெய் நிறுவனத்தின் பெருநிறுவன சமூக பொறுப்புக் கொள்கை நிதியிலிருந்து ரூ.29.93 லட்சம் மதிப்பீட்டில் திரவபெட்ரோலிய வாயு (LPG) மூலம் இயங்கும் 500 தேய்ப்புப் பெட்டிகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் அடையாளமாக, 5 பயனாளிகளுக்கு தேய்ப்புப் பெட்டிகளை முதல்வர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் துறை செயலர் ரீட்டா ஹரீஷ் தக்கர், கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் எஸ்.ஆர்.காந்தி, பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் வெங்கடேஷ், பல்கலைக்கழக துணைவேந்தர் சவுமியா, பதிவாளர் சிவசவுந்திரவல்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.