சென்னை: சென்னையில் நேரு பூங்கா, அரும்பாக்கம், சைதாப்பேட்டை ஆகிய மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் உள்ள இடங்களை வணிக பயன்பாட்டுக்கு அனுமதிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் பயணிகளிடமிருந்து வரும் கட்டண வசூல் மட்டுமின்றி, மாற்று வழிகளில் வருவாயை பெருக்க பல்வேறு நடவடிக்கைளை மெட்ரோ ரயில் நிறுவனம் எடுத்து வருகிறது. இது குறித்து, மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
மெட்ரோ ரயில்களில் பயணிகள் வருகை அதிகரித்து வருவதால், மெட்ரோ ரயில் நிலையங்களில் காலியாக உள்ள இடங்களை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ரூ.38 கோடியில் வணிக வளாகம்: இதுபோன்ற திட்டங்களுக்கு தனியார் நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன. நேரு பூங்கா, அரும்பாக்கம், சைதாப்பேட்டை ஆகிய மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் உள்ள இடங்களை தனியார் பங்களிப்போடு, வணிக பயன்பாட்டுக்கு அனுமதிக்க இருக்கிறோம்.
சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் தரைதளத்துடன், இரண்டு மாடி வணிக வளாகம் ரூ.38.70 கோடியில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, தனியார் நிறுவனமும் 12 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. டெண்டர் வெளியிட்டு, தனியார் நிறுவனம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
எனவே, அடுத்த ஒன்றரை ஆண்டில், இந்த வளாகம் அமைக்கும் பணி முடிந்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறோம். இதன் வாயிலாக, மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு கூடுதல்வருவாய் கிடைக்கும்.
கட்டண உயர்வு இன்றி, மாற்று வழிகளில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ஆண்டுதோறும் ரூ.100 கோடிவருவாய் கிடைத்து வருகிறது. வரும் ஆண்டுகளில் வருவாயை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.