சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின்உறுப்பினர் சேர்க்கை செயலி அறிமுகம் செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் 30 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.
நடிகர் விஜய் கடந்த மாதம் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார். இந்நிலையில் கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை நேற்று முன்தினம்மாலை விஜய் தொடங்கி வைத்தார்.அப்போது கட்சியின் முதல் உறுப்பினராகவும் அவர் இணைந்தார்.
அதைத்தொடர்ந்து, கட்சியில் உறுப்பினராகச் சேர அழைப்பு விடுத்து விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ, கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டது.
அதில், ‘தோழர்களாய் ஒன்றிணைவோம்’ என்ற தலைப்பில், தமிழக மக்களின் வெற்றிக்கான நமது பயணத்தில் தோழர்களாக இணைந்து மக்கள் பணி செய்யவிரும்பினால், கட்சியின் உறுதிமொழியைப் படித்துவிட்டு கீழே உள்ள உறுப்பினர் சேர்க்கை க்யூஆர் குறியீடு இணைப்புகளைப் பயன்படுத்தி உறுப்பினர் அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கிடையே, செயலி அறிமுகம் செய்தவுடன் ஏராளமானோர் உறுப்பினர் அட்டையைப் பெற முயற்சித்ததால், சில நிமிடங்களிலேயே செயலி முடங்கியது. பின்னர் சில மணி நேரம் கழித்து மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது.
இந்நிலையில், உறுப்பினர் சேர்க்கை தொடங்கி 24 மணி நேரத்தில் 30 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாகவும் விரைவில் 2 கோடியை எட்டுவோம் என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.