சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும், மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல் தலைவரான நீதிபதி ஆர்.மகாதேவன், உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரான நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோரது அறிவுறுத்தலின்படி இந்தாண்டின் முதல் லோக்-அதாலத் தமிழகம் முழுவதும் நடந்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜெ.சத்யநாராயண பிரசாத், பி.பி.பாலாஜி, ஆர்.கலைமதி, கே.ராஜசேகர், என்.செந்தில்குமார், ஜி.அருள்முருகன் மற்றும்ஓய்வு பெற்ற நீதிபதிகள் பி.கோகுல்தாஸ், எம்.ஜெயபால் ஆகியோர் தலைமையில் 8 அமர்வுகளும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ்.மதி, கே.கே.ராமகிருஷ்ணன் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் தலைமையில் 3 அமர்வுகளும், சென்னை கடன் வசூல் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் தலைமையில் ஒரு அமர்வும் ஏற்படுத்தப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
இதேபோல மாநிலம் முழுவதும்உள்ள கீழமை நீதிமன்றங்களில் மொத்தம் 482 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு நிலுவை வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதில் நேற்று மாலை நிலவரப்படி, தமிழகம் முழுவதும் மொத்தம் 62 ஆயிரத்து 559 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 505கோடியே 78 லட்சத்து 18 ஆயிரத்து659 இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற லோக்-அதாலத்தை தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஆர்.எம்.டி.டீக்காராமன், என்.சதீஷ்குமார், பி.டி.ஆதிகேசவலு, சி.சரவணன் ஆகியோர்பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர் களுக்கு இழப்பீட்டுத் தொகைக்கான உத்தரவை வழங்கினர்.
இந்த லோக்-அதாலத்தில் வழக்கறிஞர்கள், பல்வேறு துறை சார்ந்தஅரசு அதிகாரிகள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் பங்கேற்றனர்.
லோக்-அதாலத்துக்கான ஏற்பாடுகளை மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலரும் மாவட்ட நீதிபதியுமான ஏ.நசீர் அகமது, உயர் நீதிமன்றசட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் மற்றும் மாவட்ட நீதிபதியுமான கே.சுதா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.