திருவாரூர்: பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு என்று கூறி, காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடகா சூழ்ச்சி செய்வதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
இது தொடர்பாக மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் தமிழகத்தில் மார்ச் 10-ம் தேதி (இன்று) 100 இடங்களில் ரயில் மறியல்போராட்டம் நடைபெற உள்ளது. குமரி முதல் சென்னை வரைநடைபெறும் இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். சென்னைஎழும்பூரில் நடைபெறும் போராட்டத்தில் நான் பங்கேற்கிறேன்.
பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கர்நாடக அரசு பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. இதைக் காரணம் காட்டி,மேகேதாட்டு அணை கட்டுவதற்கு அனுதாபம்தேட சூழ்ச்சி செய்கிறது. இதை தமிழக முதல்வர் முறியடித்து, அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் தொடர்ந்து மவுனம் காப்பது ஏற்கத்தக்கதல்ல.
தூர்வாரும் பணியை... காவிரி டெல்டாவில் மார்ச்மாதமே தூர் வாரும் பணி தொடங்கியிருப்பதை வரவேற்கிறோம். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக அனைத்துப் பணிகளையும் தொடங்குவதற்கு, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதைக்கண்காணிக்க மாநில அளவில் உயரதிகாரிகள் கொண்ட கண்காணிப்புக் குழுக்களை ஏற்படுத்தி,உடனடியாக காவிரி டெல்டாவுக்கு அனுப்பிவைத்து, தூர் வாரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
இல்லையேல் தேர்தல் தேதிஅறிவிப்பு வரை காலம் கடத்திவிட்டு, தண்ணீர் திறப்புக்கு முன்னதாக அவசர கோலத்தில் பணி செய்வதாகக் கூறி, முறைகேடுகள் செய்ய வழிவகுக்கும்.
இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.