புதுச்சேரி: புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்டது தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை நடத்தியது.
புதுச்சேரி முத்தியால்பேட்டையில் 9 வயது சிறுமி பாலியல்வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சிறுமி கொலைதொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கிஉள்ளது. புதுச்சேரிக்கு நேற்று வந்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய சென்னை மண்டல இயக்குநர் ரவி வர்மா, ஆலோசகர் ராமசாமி, புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறைஇயக்குநர் இளங்கோவன் ஆகியோர், பிரேதப் பரிசோதனை நடைபெற்ற ஜிப்மர் மருத்துவமனை, முத்தியால்பேட்டை காவல் நிலையம் மற்றும் சிறுமியின் இல்லத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய மண்டல இயக்குநர் ரவி வர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த வழக்கில் காவல் துறை சரியான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. உடலைரப் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள்கூட மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வை ஏற்படுத்திஉள்ளது. வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும்.
போதைப் பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க, கடும் நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறைக்கு அறிவுறுத்தியுள்ளோம். மது, கஞ்சா பழக்கம் உடையவர்கள் குறித்து மக்கள் காவல் துறையிடம் தெரிவிக்க வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பாக இருக்குமாறு பெற்றோர் அறிவுறுத்துவதுடன், அவர்களை ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்க வேண்டும்.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், ஆதி திராவிடர் நலத் துறை சார்பில் வரும் சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.7.13 லட்சம் வழங்கப்படும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தபிறகு ரூ.4 லட்சம் வழங்கப்படும்.
இதுபோன்று இனி யாருக்கும்நிகழக்கூடாது. கொலைக் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க வேண்டுமென அனைவரும் விரும்புகின்றனர். தனிப்பட்ட முறையில் எங்கள்இதயமும் கனத்துப் போயுள்ளது.
சிறுமியின் பெற்றோர் எங்களிடம் எந்த கோரிக்கையும் முன்வைக்கவில்லை. சட்டப்படியிலான நிவாரண உதவிகள் அவர்களுக்குக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். காவல் துறை மற்றும் அரசின்நடவடிக்கைகள் எங்களுக்கு திருப்திகரமாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.