மேட்டுப்பாளையத்தில் நடந்த வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன். 
தமிழகம்

“திமுகவின் ஆ.ராசா தோற்கடிக்கப்பட வேண்டும்” - எல்.முருகன் பேச்சு

செய்திப்பிரிவு

மேட்டுப்பாளையம்: நீலகிரி மக்களவை தொகுதியில் போட்டியிடும், திமுகவின் ஆ.ராசா எம்.பி தோற்டிக்கப்பட வேண்டும் என, மேட்டுப்பாளையத்தில் நடந்த நிகழ்வில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசினார்.

மத்திய இணையமைச்சர் எல்.முருகன், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு நேற்று வந்தார். அவருக்கு பாஜகவினர் இருசக்கர வாகனப் பேரணி நடத்தி உற்சாக வரவேற்பு அளித்தனர். அன்னூர் சாலை நால்ரோடு முதல் மேட்டுப்பாளையம் நகரம் வரை 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு, 400-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் வந்து பாஜகவினர் வரவேற்றனர்.

மேட்டுப்பாளையம் நகரப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பாஜக தேர்தல் பணிமனைக்கு வந்த இணையமைச்சர் எல்.முருகன் உஜ்வாலா திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பொதுமக்களுக்கு இலவச காஸ் இணைப்புக்கான அடுப்புகளும், முத்ரா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கடனு தவியும் வழங்கினார்.

முன்னதாக அங்கு, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசும்போது, ‘‘நீலகிரி மக்களவை தொகுதி மக்களிடம் ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற திமுக எம்.பி ஆ.ராசா, மக்களுக்கு நன்மை செய்யாமல் 2 ஜி ஊழலில் ஈடுபட்டார். இதனால் தொகுதி மக்களுக்கு மட்டுமின்றி, நாட்டு மக்கள் அனைவருக்கும் அவமானத்தை தேடித் தந்தார். இம்முறையும் இங்கு திமுக சார்பில் போட்டியிடும் ஆ.ராசா தோற்கடிக்கப்பட வேண்டும். புதுடெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் 2 ஜி வழக்கில் இன்றோ, நாளையோ, நாளை மறுநாளோ என எந்த நேரத்திலும் தீர்ப்பு வரலாம்’’ என்றார்.

SCROLL FOR NEXT