கனகராஜ், தனபாலன் 
தமிழகம்

திண்டுக்கல் தொகுதி பாஜக வேட்பாளர் யார்? - பெயர்களை பரிந்துரைத்த கட்சி நிர்வாகிகள்

பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் பாஜக கிழக்கு மாவட்டத் தலைவர் அல்லது மேற்கு மாவட்டத் தலைவர் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர். திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் பாஜக போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. ஏற்கெனவே தேர்தல் அலுவலகத்தை திண்டுக்கல்லில் பாஜக திறந்துவிட்டது.

அதைத்தொடர்ந்து திண்டுக்கல் மக்களவை தொகுதிக்குட்பட்ட நத்தம், ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, பழநி என சட்டப்பேரவை தொகுதிவாரியாக தேர்தல் அலுவலகங்களை அக்கட்சி திறந்து வருகிறது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் யாரை போட்டியிட செய்யலாம் என கருத்துக்கேட்பு கூட்டம் மாநில விவசாய அணி தலைவர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள், மண்டல தலைவர்கள், சட்டப்பேரவைத் தொகுதி அமைப்பாளர்கள், இணை அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் யார் போட்டியிட வேண்டும் என தங்கள் கருத்துகளை ஒரு சீட்டில் எழுதி தந்துள்ளனர்.

இதில் பெரும்பாலான நிர்வாகிகள், தொடர்ந்து கட்சியில் பொறுப்பு வகித்தவர்கள், கட்சி போராட்டங்களில் கலந்து கொண்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக திண்டுக்கல் கிழக்கு மாவட்டத் தலைவர் தனபாலன், மேற்கு மாவட்டத் தலைவர் கனகராஜ் ஆகியோரில் ஒருவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என பெரும்பாலான நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அண்மையில் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த சந்திரசேகர், தொப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் மகுடீஸ்வரவன் ஆகியோரும் தங்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என கட்சி தலைமையை கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதனிடையே, தனபாலன், கனகராஜ், சந்திரசேகர் உள்ளிட்டோரின் பெயர்களை மாநில தலைமை, தேசியத் தலைமைக்கு பரிந்துரைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT