அரூர்: அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை உள்ள பகுதிகள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் உள்ளாட்சி நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன. தருமபுரி மாவட்டத்தில் அரூர் பகுதியில்பருவமழை குறிப்பிட்ட அளவு பெய்யாததால் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. அரூர் பகுதியில் உள்ள வள்ளி மதுரை, வாணியாறு அணைகளில் நீர்மட்டம் பாதிக்கும் குறைவாகவே உள்ளது. இதனால் பாசனத்துக்கு கூட நீர் திறக்க முடியாத நிலை உள்ளது.
நீர்மட்டம் குறைவால் வேளாண் பணிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பல்வேறு கிராமப் பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும் சூழல் நிலவுகிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ள நிலையில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
இதனால், ஏப்ரல், மே மாதங்களில் அனைத்து பகுதிகளிலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உள்ளாட்சி நிர்வாகங்கள் உடனடியான மேற்கொள்ள வேண்டும் என இந்து தமிழ் திசை நாளிதழில் கடந்த 3-ம் தேதி செய்தி வெளியானது.
இந்நிலையில், அரூர் கோட்டத்துக்கு உட்பட்ட அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்புள்ள கிராமங்கள் குறித்த கணக்கெடுக்கும் பணியில் அந்தந்த உள்ளாட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளன.
சமீபத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியர் சாந்தி, குடிநீர் பற்றாக்குறை வாய்ப்புள்ள கிராமங்கள் குறித்து உடனடியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும். பழுதடைந்துள்ள மின் மோட்டார்களை பழுது நீக்கவும், குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன் பேரில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர் மற்றும் மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்களதுஒன்றியங்களுக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி நிர்வாகங்களிடம் இதுகுறித்த முழு தகவலையும் உடனடியாக சேகரித்து அளிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் அனைத்து ஊராட்சிகளிலும் தங்கள் பகுதிக்கு தேவையான குடிநீர்அளவு, பழுதடைந்துள்ள மின் மோட்டார்கள், தேவையான குடிநீர் குழாய்கள் உள்ளிட்டவை குறித்து ஊராட்சி செயலர்கள் கணக்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அரூர், பாப்பிரெட்டிப் பட்டி, கடத்தூர், பொ. மல்லாபுரம் உள்ளிட்ட பேரூராட்சிகளில் குடிநீர் தொட்டிகள் அமைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அனைத்துப் பகுதிகளிலும் விரைவில் பணிகள் மேற்கொள்ளப் பட்டு குடிநீர் பற்றாக்குறையை முன்கூட்டியே தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றனர்.