சென்னை: சென்னை, கீழ்ப்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையம் அருகில் ரூ.1675 கோடியில் மணலி, மாதவரம், ராயபுரம் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளுக்கான பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு நேற்று அடிக்கல் நாட்டினார்.
விழாவில் அமைச்சர் பேசியதாவது: சென்னை மாநகர பகுதிகளுக்கு தினசரி 1050 மிலலியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், குடிநீர் திட்டப் பணிகள்நடைபெற்றுவரும் பகுதிகள், அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.
கடந்த 33 மாதங்களில் சென்னைகுடிநீர் வாரியத்தின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.1326.90 கோடி மதிப்பீட்டில் 37 குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 9.70லட்சம் பொதுமக்கள் பயன் பெற்றுள்ளனர். மேலும் ரூ.890.36 கோடியில் 19 பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் மூலம் 21.78 லட்சம் மக்கள் பயன்பெறுகின்றனர்.
மேலும், ரூ.175.82 கோடியில் 5குடிநீர் திட்டப் பணிகள் தொடங்கிநடைபெற்று வருகின்றன. இதன்மூலம் 2.48 லட்சம் மக்கள் பயன்பெறுவர். இதுதவிர, ரூ.2721.67 கோடியில் 23 பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. பொதுமக்களுக்கு சீரான குடிநீர்வழங்கும் பொருட்டு 6 ஏரிகள்மற்றும் 2 கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் மூலம் சென்னைமாநகருக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.
இதை மேலும் மேம்படுத்த, பேரூரில் ரூ.4276.44 கோடியில் தினசரி 400 மில்லியன் லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட தெற்காசியாவிலேயே மிகப்பெரிய கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்துக்கு அடிக்கல் நாட்டி பணிகள் நடைபெற்று வருகின்றன.
நெம்மேலியில் ரூ.1516 கோடியில் தினசரி 150 மில்லியன் லிட்டர்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம்கடந்த மாதம் திறக்கப்பட்டது. இதன்மூலம் 9 லட்சம் பேர் பயன்பெறுகின்றனர். பொதுமக்கள் தேவைகருதி, துறையின் சார்பில் நடைபெறும் அனைத்து உட்கட்டமைப்பு பணிகளும் உரிய காலத்தில் முடிக்கப்படும்.
ஏரிகளில் போதிய அளவு நீர் இருப்பதாலும், 3 கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள் மூலம் 350 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கப் பெறுவதாலும் குடிநீர் வழங்கலில் எவ்வித தடங்கலும் இல்லாமல் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில்ரூ.1.12 கோடியில் வழங்கப்பட்ட3 ரோபோ இயந்திரங்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டன. நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணைமேயர் மகேஷ்குமார், நகராட்சி நிர்வாகத் துறை செயலர் தா.கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.