தென்காசி நகராட்சி கூட்டத்துக்கு சுயேச்சை கவுன்சிலர் தெரு நாயை அழைத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது 
தமிழகம்

தென்காசி நகராட்சி கூட்டத்துக்கு தெரு நாயுடன் வந்த கவுன்சிலர்

செய்திப்பிரிவு

தென்காசி: தென்காசி நகராட்சி கூட்டம் நேற்று மாலையில் நகராட்சி தலைவர் சாதிர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து கவுன்சிலர்கள் விவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, 10-வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் ராசப்பா, தென்காசி நகர் பகுதியில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வலியுறுத்தி, ஒரு நாயைக் கட்டி இழுத்துவந்தார்.

மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து பேசும் நேரத்தில் மன்றத்தை அவமதிக்கும் விதமாகவும், நாயை சித்ரவதைப்படுத்தும் விதமாகவும் சுயேச்சை கவுன்சிலர் செயல்படுவதாகக் கூறி, பிற கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நாயை வெளியே கொண்டுசெல்லக் கூறி சில கவுன்சிலர்கள் தண்ணீர் பாட்டில்களை வீசி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கவுன்சிலர்கள் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாயை கொண்டுவந்த கவுன்சிலர் மற்றும்தண்ணீர் பாட்டில்களை வீசிய கவுன்சிலர்களை நகராட்சி தலைவர் கண்டித்தார். பின்னர், நாய் அவிழ்த்து விடப்பட்டு வெளியேற்றப்பட்டது.

SCROLL FOR NEXT