தமிழகம்

பழைய முகங்கள்... புதிய உத்வேகம்! - குமரி தொகுதியில் வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே பிரச்சாரம் தீவிரம்

எல்.மோகன்

நாகர்கோவில்: இந்தியாவின் கடைக்கோடியில் உள்ள கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வசம் உள்ளது. வசந்தகுமாருக்குப் பின் அவரது மகன் விஜய் வசந்த் தற்போது எம்.பி.யாக உள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில்தான், கன்னியாகுமரி தொகுதியில் முதன்முதலில் வசந்தகுமார் களம் இறங்கினார். ஆனால், இத்தேர்தலில் பாஜகவின் மூத்த நிர்வாகி பொன் ராதாகிருஷ்ணன் 3,72,906 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதுடன், பாஜக அமைச்சரவையில் மத்திய இணை அமைச்சரானார். அத்தேர்தலில் வசந்தகுமார் 2,44,244 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார்.

அடுத்தமுறை 2019-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட வசந்தகுமார் 6,27,235 வாக்குகளைப் (59.77 சதவீதம்) பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பொன் ராதாகிருஷ்ணன் 3,67,302 வாக்குகளுடன் (35 சதவீதம்) தோல்வி அடைந்தார்.

பின்னர் வசந்தகுமார் மரணமடைந்ததை தொடர்ந்து, 2021-ல் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்தை காங்கிரஸ் களம் இறக்கியது. இதைப்போல் பாஜக சார்பில் மீண்டும் பொன் ராதாகிருஷ்ணனே களம் கண்டார். இதில் விஜய் வசந்த் 4,15,167 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

இம்முறை கட்சிகள் இதுவரை வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. பாஜகவுக்கு கணிசமான வாக்குவங்கி கொண்ட இத்தொகுதியை, அரசியல் நோக்கர்கள் உற்று நோக்குகின்றனர். சமீபத்தில் காங்கிரஸில் இருந்து பிரிந்து பாஜகவில் சேர்ந்த விஜயதரணி உட்பட முக்கிய பிரமுகர்கள் பாஜக சார்பில் போட்டியிட முனைப்பு காட்டி வருகின்றனர்.

பொன் ராதாகிருஷ்ணனுக்கு பதில், இம்முறை வேறு வேட்பாளர்களை களம் இறக்கவும் பாஜக தலைமை பரிசீலனை செய்தது. ஆனால், மீண்டும் ஒருமுறை போட்டியிட வாய்ப்பு வழங்குமாறு கட்சி தலைமையிடம் பொன் ராதாகிருஷ்ணன் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுவரை பாஜக வேட்பாளர் விவரம் அறிவிக்கப்படாத நிலையில், பிரதமர் மோடி அரசின் சாதனைகளைக் கூறி கடந்த ஒரு மாதமாகவே பொன் ராதாகிருஷ்ணன் கிராம் கிராமமாக, வீடுவீடாக சென்று வாக்குகளை சேகரிக்கத் தொடங்கிவிட்டார்.

இதுபோலவே, காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்றே கூட்டணியில் முடிவாகாத நிலையில், விஜய் வசந்த் எம்பியே மீண்டும் கன்னியாகுமரியில் போட்டியிட இருப்பதாக காங்கிரஸார் மத்தியில் பேச்சு பரவலாகியுள்து. கடந்த தேர்தலில் போட்டியிட்ட பழைய முகங்களே, மீண்டும் தொகுதியைக் கைப்பற்றும் முயற்சியில் உத்வேகத்துடன் களம் இறங்குகின்றன.

இதுதவிர, அதிமுக தரப்பில் சீட் கிடைக்கும் என நம்பப்படும் பட்டியலில், மீனவர் சமூகத்தை சேர்ந்த நசரேத் பசிலியான் பெயர் முதலிடத்தில் இருக்கிறது. நாம் தமிழர் கட்சி சார்பிலும் மீனவர் சமூகத்தை சேர்ந்த மரிய ஜெனிபர் என்பவரை களம் இறக்க கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது.

கன்னியாகுமரி தொகுதியை பொறுத்தவரை பாஜக, காங்கிரஸ் இடையே மீண்டும் நேரடி போட்டி நிலவினாலும், அதிமுக, நாம் தமிழர் கட்சியும் கடும் போட்டியைக் கொடுக்கும், வாக்குகளைப் பிரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மனோ தங்கராஜின் கனவு: திமுக கூட்டணியில் அதிகமுறை காங்கிரஸ் கட்சிக்கே கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது உள்ளூர் திமுகவினரிடம் மன வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இம்முறை குமரியை திமுகவுக்கு ஒதுக்க வேண்டும் என, கட்சித் தலைமையிடம் அமைச்சர் மனோ தங்கராஜ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

ஏனெனில், அவர் தனது மகன் ரெமோனை களம் இறக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். காங்கிரஸ் - திமுக இடையே இன்னும் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படாத நிலையில், அமைச்சரின் கனவு பலிக்குமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

SCROLL FOR NEXT