மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையிடம், கட்சி நிர்வாகிகள் பல்வேறு கருத்து, ஆலோசனைகளை தெரிவித்தனர்.
அப்போது பேசிய நிர்வாகி ஒருவர், ‘‘கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்க ஆப்பில் (செயலியில்) பதிவு செய்யும்போது, ஓடிபி கேக்குறீங்க. ஆனா, யாருடன் கூட்டணி சேரனும்னு எங்களிடம் கருத்து கேக்க மாட்டேங்கிறீங்க’’ என்றார் ஆதங்கத்துடன்.
அதற்கு செல்வப்பெருந்தகை பதிலளித்துப் பேசும்போது, ‘‘கூட்டணி குறித்து தொண்டர்களிடம் கருத்து கேட்கும் காலம் நிச்சயம் வரும்’’ என்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகையிடம், திமுக கூட்டணியில் கடந்த முறையை விட இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகளை குறைத்துக் கொடுத்தால் ஏற்பீர்களா? என்று கேட்டதற்கு, ‘‘எதற்காக குறைவான தொகுதி கொடுப்பார்கள்? பிற கூட்டணி கட்சிகளுக்கு கடந்த முறை கொடுத்ததைப் போன்றே கொடுத்துள்ளார்கள்.
எனவே காங்கிரஸ் கட்சிக்கும் குறைக்க மாட்டார்கள். கடந்த முறை கூட்டணியில் இருந்த ஐஜேகே, இந்த முறை பாஜக கூட்டணிக்கு சென்றுவிட்டதால், ஒரு தொகுதி உபரியாகவே இருக்கிறது. அதனால் ஒரு சிக்கலும் இல்லை. எல்லாம் நல்லவிதமாகவே நடக்கும்’’ என்றார்.