திருநள்ளாறு சனி பகவான் கோயில், காரைக்கால் கடற்கரை மேம்பாட்டு திட்டங்களை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கிவைத்த நிகழ்ச்சியில் பங்கேற்ற புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர்.படம்: வீ.தமிழன்பன் 
தமிழகம்

ரூ.56 கோடியில் நவக்கிரக கோயில்கள் மேம்பாட்டு திட்டம்: காணொலி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்

செய்திப்பிரிவு

காரைக்கால்/கும்பகோணம்: நவக்கிரக கோயில்களான திங்களூர் சந்திரன் கோயில், ஆலங்குடிகுரு பகவான் கோயில், திருநாகேஸ்வரம் ராகு கோயில், சூரியனார் கோயில், கஞ்சனூர் சுக்கிரன் கோயில், வைத்தீஸ்வரன்கோவில் செவ்வாய் கிரக கோயில், திருவெண்காடு புதன் கிரக கோயில், கீழப்பெரும்பள்ளம் கேது கோயில், திருநள்ளாறு சனிபகவான் கோயில் ஆகியவற்றில், மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் பிரசாத் மற்றும் சுதேசி தர்ஷன் 2.0 திட்டங்களின் மூலம் ரூ.56 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற உள்ளன.

மேலும், ரூ.20.30 கோடியில் திருநள்ளாறு கடற்கரை மேம்படுத்தப்படுகிறது. திருநள்ளாறு கோயில் மற்றும்காரைக்கால் கடற்கரை மேம்பாட்டுத் திட்ட தொடக்க விழா திருநள்ளாறு ஆன்மிகப் பூங்கா அருகிலும், மற்ற நவக்கிரக கோயில்களின் மேம்பாட்டுப் பணிகள் தொடக்க விழா திருநாகேஸ்வரத்திலும் நேற்று நடைபெற்றது. பிரதமர் மோடி நகரிலிருந்து காணொலி வாயிலாக திட்டங்களைத் தொடங்கிவைத்தார்.

புதுச்சேரியில் இருந்து துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் என்.ரங்கசாமி ஆகியோர் காணொலி வாயிலாகப் பேசினர்.

இந்த திட்டத்தின் மூலம், திருநள்ளாறில் வாகன நிறுத்துமிடம், பேட்டரி வாகனங்கள், லேசர் ஒளி-ஒலி காட்சி, நளன் குளத்தைச் சுற்றி நிழல் மண்டபம், காரைக்கால் கடற்கரையில் புல்வெளி, தங்கும் கூடாரங்கள், கடைகள், உணவகங்கள், கழிப்பறைகள், செயற்கை நீர் விளையாட்டு அரங்கம், நடைபாதை உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன.

திருநள்ளாறில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம், அமைச்சர்கள் கே.லட்சுமி நாராயணன், சி.ஜெயக்குமார், ஏ.கே.சாய்ஜெ.சரவணன்குமார், அமைச்சர் (நியமனம்) பி.ஆர்.என்.திருமுருகன், எம்.பி. எஸ்.செல்வகணபதி, எம்எல்ஏ பி.ஆர்.சிவா, சுற்றுலாத் துறைச் செயலர் ஆர்.கேசவன், இயக்குநர் முரளிதரன், மாவட்ட ஆட்சியர் து.மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதேபோல, திருநாகேஸ்வரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், இந்திய சுற்றுலா அமைச்சக உதவி இயக்குநர் ஷ்யாம் பாபு, கோட்டாட்சியர் எஸ்.பூர்ணிமா, தஞ்சாவூர் மாவட்ட சுற்றுலா அலுவலர் அ.சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT