கோவை மாநகர காவல்துறையின் சார்பில், நேற்று நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் பங்கேற்ற பெண் காவலர்கள். | படம்: ஜெ.மனோகரன் | 
தமிழகம்

மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் காவலர்கள் பங்கேற்ற மாரத்தான் @ கோவை

செய்திப்பிரிவு

கோவை: உலக மகளிர் தினத்தையொட்டி, கோவை மாநகர காவல்துறையின் சார்பில், பெண் காவலர்களுக்கான 5 கிலோ மீட்டர் தூர மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. கோவை ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கிய ஓட்டம் பாலசுந்தரம் சாலை, அண்ணாசிலை, அவிநாசி சாலை, ரேஸ்கோர்ஸ் வழியாகச் சென்று மீண்டும் ஆயுதப்படை மைதானத்தில் நிறைவடைந்தது.

மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார். ஆயுதப்படையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடக்க நிகழ்வில், காவல் ஆணையர் பேசும்போது,‘‘ மாரத்தான் ஓட்டம் என்பது உடல், மனம் ஆகியவற்றை பலப்படுத்தும். அதன் மூலம் பெண் காவலர்களாகிய நீங்கள் உங்கள் திறனை அறிந்து கொள்ள முடியும். இதனால் உங்களால் பெரிதாக சாதிக்க முடியும். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதோடு, உங்களுக்குள் இருக்கும் சக்தியையும், திறனையும் உணர்ந்து கொள்ள இது நல்ல வாய்ப்பாக இருக்கும்” என்றார்.

இந்நிகழ்வில், துணை ஆணையர்கள் கே.சரவணக்குமார், ஆர்.சுஹாசினி, ஆயுதப்படை காவல் உதவி ஆணையர் ஏ.சேகர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT