கோவை: மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, நட்சத்திர பேச்சாளர்கள் ரூ.1 லட்சம் வரை கொண்டு செல்லலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மக்களவை தேர்தல் வர உள்ள நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
கூட்டத்துக்கு ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமை வகித்து பேசியதாவது: மக்களவை தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் தேர்தலுக்கான பல்வேறு முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், பறக்கும்படை குழு, நிலையான கண்காணிப்பு குழுக்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பறக்கும்படை குழுவில் ஒரு மாஜிஸ்திரேட் நிலை அலுவலர் தலைமையில் காவல் துறை ஆய்வாளர், ஆயுதம் ஏந்திய போலீசார் மற்றும் ஒரு ஒளிப்பதிவாளர் பணியாற்றுவர்.
ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு மூன்று குழுக்கள் வீதம் தலா 8 மணி நேரம் செயல்படத்தக்க வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான அனைத்து புகார்களையும் இக்குழு விசாரணை செய்யும்.
கள்ளத்தனமாக பணம் எடுத்துச் செல்வது, மதுபானங்கள் விநியோகிக்க கொண்டு செல்வது உட்பட வாக்காளர்களுக்கு கையூட்டு கொடுக்கும் விதமான அனைத்து நடவடிக்கைகளையும் இக்குழு கண்காணிக்கும். புகார் தெரிவிக்க மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
பறிமுதல் செய்யப்படும் நிகழ்வுகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்படும். நட்சத்திர பேச்சாளர்கள் தங்களது சொந்த உபயோகத்திற்காக ரூ.1 லட்சம் வரை கொண்டுசெல்லலாம். ஆய்வில் பத்து லட்சம்ரூபாயக்கு மேல் கண்டறியப்பட்டால் வருமானவரித்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சட்டத்திற்கு புறம்பானகுற்றச் செயல்கள் கண்டறியப்பட்டால் அப்பகுதி காவல் ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும்.
தேர்தல் பணி மிக முக்கியமாகும். தேர்தல் நடத்தை விதியின்படி அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றி சிறந்த முறையில் தேர்தல் நடைபெற ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் மோ.ஷர்மிளா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.