மாணவர்களிடம் கலந்துரையாடிய கார்த்தி சிதம்பரம் எம்பி. 
தமிழகம்

“தொழில்நுட்ப துறையில் தமிழை திணிக்க கூடாது” - கார்த்தி சிதம்பரம் கருத்து

செய்திப்பிரிவு

காரைக்குடி: வள்ளுவர் பேரவை சார்பில் காரைக்குடியில் மாணவர்களுடன் எம்பி, எம்எல்ஏ கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கார்த்தி சிதம்பரம் எம்பி பேசியதாவது: தொழில்நுட்பத் துறையில் தமிழை திணிக்கக் கூடாது. அதை ஆங்கிலத்தில்தான் படிக்க வேண்டும். அனைத்திலும் தமிழ் என்பதை ஏற்க முடியாது. மாணவர்களுக்கு கட்டாயம் தமிழ், ஆங்கிலம் தேவை.

ஜெயலலிதாகூட ஒருமுறை சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ ஒருவர் ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்று பேசினார். அவரை ‘சைக்கிள் பாகங்களை முதலில் தமிழில் கூறுங்கள்' என்று வேடிக்கையாக கேட்டார். அதுபோலத் தான் அனைத்தையும் தமிழுக்கு மாற்றி படிக்க முடியாது. எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். ஆனால் மதச் சார்பற்றவனாக இருக்கிறேன்.

அரசியல்வாதிகள் கடவுள் நம்பிக்கை இல்லை என்று கூறி னால் நம்பாதீர்கள். அவர்கள்தான் அதிகமாக ஜோசியம் பார்ப்பர், கோயிலுக்கு போவர். சாமி கும்பிடுவார்கள். தேர்தல் வந்து விட்டால் அவை அதிகமாகி விடும். என்னிடமும் சில மூட நம்பிக்கை உள்ளது.

பணியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி பாஜகவில் சேர்ந்து போட்டியிட போவதாக கூறியது வேதனைக்குரியது. அவரை பாஜகவினர் சந்தித்து கூப்பிட்டதாக கூறியுள்ளார். அப்படியிருந்தால், அவர் இதுவரை அளித்த தீர்ப்பில் சந்தேகம் எழும்.

நீதிபதிகள் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், சில ஆண்டுகள் கழித்துதான் அரசியல் கட்சிகளில் சேர வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும். அதிமுக, பாஜக கூட்டணியிலும் இதுவரை பேச்சுவார்த்தை முடிவடையாமல் உள்ளது. ஆனால் திமுக கூட்டணியை மட்டுமே கேள்வி கேட்பது வியப்பாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT