புதுச்சேரி: போதை பொருள் அடிப்படையில் சிறுமி கொலை நடந்துள்ளதால் அரசு, காவல் துறை செயல்பாடின்மை கண்டித்து இண்டியா கூட்டணி சார்பில் புதுச்சேரியில் வரும் மார்ச் 8-ம் தேதி பந்த் போராட்டம் நடக்கிறது. வியாழக்கிழமை (மார்ச் 7) மாலை அண்ணாசிலையிலிருந்து காமராஜர் சிலை வரை ஊர்வலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று ‘இண்டியா’ கூட்டணி சார்பில் இன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தரப்பில் மாநிலத்தலைவர் எம்பி வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்எல்ஏ வைத்தியநாதன், திமுக சார்பில் எதிர்க்கட்சித்தலைவர் சிவா, எம்எல்ஏக்கள் சம்பத், செந்தில்குமார், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் சலீம் சிபிஎம் மாநில செயலர் ராஜாங்கம், விசிக தேவபொழிலன், மதிமுக கபிரியேல் மற்றும் கூட்டணிக்கட்சியினர் பங்கேற்றனர்.
அக்கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் காங்கிரஸ் மாநிலத்தலைவர் எம்பி வைத்திலிங்கம் கூறியதாவது: “சிறுமி கொலை தொடர்பாக விவாதித்தோம். போதை அடிப்படையில் அக்கொலை நடந்துள்ளது. வரும் 8-ம் தேதி காலை 6 முதல் மாலை 6 வரை முழு பந்த் போராட்டம் நடக்கிறது. பொதுத்தேர்வு நடப்பதால் அதை பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்போம்.
அத்தியாவசிய பொருள்கள், மருத்துவ வசதிகள் தேவையான அளவு கிடைக்க நடவடிக்கை எடுப்போம். அரசு செயலற்ற தன்மை, காவல்துறை, அத்துறை அமைச்சர் செயலற்ற தன்மை கண்டித்து அண்ணா சிலையிலிருந்து காமராஜர் சிலைவரை நாளை (மார்ச் 7) மாலை ஊர்வலம் நடத்தவுள்ளோம். பாதிக்கப்பட்டோர் பணம் கேட்கவில்லை. குற்றவாளிகளை கண்டறிந்து தூக்குத்தண்டனை தாருங்கள் என்று கேட்கிறார்கள். பணம் தந்து குற்றத்தை மூடிமறைக்க அரசு பார்க்கிறது.
கொடுத்தால் ரூ.1 கோடி தரவேண்டும். முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் எந்த செயல்பாடும் இல்லாமல் இருப்பதால் அதற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும். தமிழகத்தில், புதுச்சேரியில் கஞ்சா உற்பத்தி இல்லை. ஆளுநர் சார்ந்த கட்சியினர்தான் கடத்தி வந்து விற்கிறார்கள். தமிழகத்தை விட புதுச்சேரியில் நூறு பங்கு அதிகமாக விற்கிறார்கள். அதனால் இங்கு குவிகிறார்கள். பாஜக ஆளுநர் உடந்தையாக இருப்பார்களோ என்ற சந்தேகம் உள்ளது” தெரிவித்தார்.
எதிர்க்கட்சித்தலைவர் சிவா கூறுகையில், “தமிழகத்தில் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக திமுகவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறிய மாநிலமான புதுச்சேரியில் கஞ்சா, போதைப்பொருள்கள் விற்கப்படுகிறது. மக்கள் திரண்டு போராட்டம் நடத்துகிறார்கள். செயல்படாத காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
சம்பவம் நிகழ்ந்து பல நாட்களுக்கு பிறகு தற்போதுதான் ஆளுநர், அமைச்சர் வாயை திறக்கிறார்கள். காவல்துறையில் லஞ்சம் தந்தால் இடம் தரப்படுகிறது. காவல்துறை சரியான வேலை செய்தாததுதான் சிறுமி கொலை பிரச்சினைக்கு காரணம். புதுச்சேரி முழுக்க மக்களே முன்வந்து போராட்டம் நடத்துகின்றனர். விரைந்து வழக்கை நடத்தி தண்டனை வழங்கவேண்டும்.
புதுச்சேரியில் கடந்த 3 ஆண்டுகளில் மக்கள் கடும் பாதிப்பில் உள்ளனர். கஞ்சாவால் இளையோர் சீரழிந்து வருகின்றனர். சிறுமி காணாமல் போனபோது காவல்துறை சரியாக வேலை செய்யவில்லை. போலீஸார் அஜாக்கிரதைதான் இதற்கு முக்கியக்காரணம். பாஜகவுக்கு வேண்டியோர்தான் காவல்நிலையத்தில் பணியமர்த்தப்பட்டனர்.
துணைநிலை ஆளுநர் தமிழிசை பொறுப்பில்லாமல் செயல்படுகிறார். புதுச்சேரியில் கஞ்சா விற்பனை தொடர் கொலை நடந்தும் முறையான நடவடிக்கையில்லை. கஞ்சாவை கட்டுப்படுத்தாவிட்டால் சஸ்பெண்ட் என்றும் சொல்லவில்லை. அமைச்சர் நேரடி ஆசிர்வாதத்துடன் இருப்பதால்தான் மோசமான சூழல் ஏற்பட்டுள்ளது. பாலியல் தொழில் கட்டுப்படுத்தப்படவில்லை.
ரெஸ்டோ பாரில் ஆபாச நடனங்கள் நடக்கிறது. போதைப்பொருள்களை ஒழிக்கக்கோரி நாளை (மார்ச் 7) மாலை ஊர்வலம் நடத்துகிறோம். பந்த் போராட்ட நாளில் தேர்வு இருப்பதால் பள்ளிகள் செயல்படும். தேர்வு நடத்தவும், பள்ளி வாகனங்கள் செல்லவும் அனுமதிப்போம். ஆளுநர் தமிழிசை இவ்விஷயத்தை திசை திருப்புகிறார். அவரின் நாடக அரசியல் எடுபடாது.
மக்களிடம் அவருக்கான எதிர்ப்பை தற்போது உணர்ந்திருப்பார். பாஜகவில் இங்கு தமிழிசைக்கு போட்டியிட வாய்ப்பு தரலாம். இவ்விஷயத்தில் எதிர்க்கட்சிகள் யாரும் அரசியல் செய்யவில்லை. மக்கள், மாணவர்கள், இளையோர் தானாக முன்வந்து போராட்டம் நடத்துவதால் தமிழிசைக்கும், ஆட்சியாளர்களுக்கும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் தடுக்கவோ, காவல்துறையினர் மீது நடவடிக்கையோ எடுக்காதது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.