தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் தொல்லியல் ஆதாரங்களைப் பெற, இன்னும் முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறினார்.
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வரலாற்றுத் துறை, வரலாற்றுப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் `சிந்து முதல் பொருநை வரை' என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் அ.ஜான்பீட்டர் தலைமை வகித்தார். வரலாற்றுப் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் அ.கருணானந்தன், புரவலர் கு.ராமகிருஷ்ணன் வாழ்த்திப் பேசினர்.
கருத்தரங்கத்துக்கு பின்னர் அமர்நாத் ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெல்டா மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சி செய்யப்படுகிறது. அதேநேரம், இன்னும் முழுமையாக ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும். ஆனால், இங்கு தொல்லியல் எச்சங்களைக் கண்டறிவதில் மிகுந்த சிரமம் உள்ளது.
நெற்களஞ்சியமாகத் திகழும் இப்பகுதியில் சிறந்த நாகரிகம் தோன்றியதற்கான ஆதாரங்கள், இன்னும் முழுமையான ஆய்வுகள் மேற்கொள்வதன் மூலம்தான் கிடைக்கும். இதற்காக தமிழக அரசு சிறந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
கீழடி என்பது, மிகப் பெரிய தொல்லியல் மேடு. இதை இன்னும் தோண்டுவதன் மூலம், முழுமையான வரலாறு கிடைக்கும். பாடத் திட்டங்களில் கற்றுக் கொள்வதன் மூலம்தான், மாணவர்களுக்கு தொல்லியல் மீதான ஆர்வம் ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.
கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவர் அ.கார்குழலி வரவேற்றார். இணைப் பேராசிரியர் சு.சாந்தி நன்றி கூறினார்.