திட்டக்குடி அடுத்த கழுதூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விதவைப் பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் அமைச்சர் சி.வெ.கணேசன். உடன் என்எல்சி தலைவர் பிரசன்னகுமார். 
தமிழகம்

பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வில் குலுங்கி குலுங்கி அழுத அமைச்சர் சி.வெ.கணேசன்

செய்திப்பிரிவு

விருத்தாசலம்: திட்டக்குடியில் விதவைப் பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சி.வெ.கணேசன், உயிரிழந்த தனது மனைவி குறித்து பேசுகையில் மேடையிலேயே குலுங்கி குலுங்கி அழுதார்.

நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், திட்டக்குடி சட்டப் பேரவை தொகுதிக்கு உட்பட்ட 2,000 விதவைப் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் கழுதூரில் நடைபெற்றது. இதில் என்எல்சி தலைவர் பிரசன்ன குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் முன்னிலையில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் விதவைப் பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினார்.

அப்போது அமைச்சர் பேசுகையில், “என்எல்சி நிறு வனம்பல்வேறு சமூகப் பொறுப்புணர்வு திட்டங்களை செய்து வருகிறது. குறிப்பாக பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் தையல் இயந்திரங்களை வழங்குகிறது. என் மனைவி பவானி, இதுபோன்ற யோசனையை என்னிடம் முன்வைத்தார். ஏனென்றால், அவருக்கு மனதுக்கு கஷ்டமாக இருக்கும்போது, அதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் தையல் இயந்திரத்தில் அமர்ந்து ஏதேனும்துணிகளை தைத்துக் கொண்டி ருப்பார்.

பெண்கள் தங்களுக்கு ஏற்படுகின்ற குடும்ப பாரம், வலி போன்றவைகளை வெளியே சொல்ல முடியாமல் தையல் இயந்திரமே கதி என்று இருப்பார்கள், திட்டக்குடி தொகுதியிலேயே எத்தனை பெண்கள் கணவரை இழந்து பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு இருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் தையல் இயந்திரம் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இது என் மனைவியின் ஆசை. அவர், யாரையும் ஏமாற்றக்கூடாது, எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்பார். இந்த முயற்சியிலும் அப்படித்தான் இறங்கினேன்.

இங்கு வந்துள்ள பெண்களை பார்க்கும் போது எனது சகோதரிகள், தாயார் தான் நினைவுக்கு வருகின்றனர். எனவே தான் உங்களில் ஒருவனாக ஒரு சகோதரனாக உதவி செய்ய வேண்டும் என்று எண்ணியே இத்தகைய முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறேன்” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே மேடையில் குலுங்கி குலுங்கி அழுதார். அப்போது அருகிலிருந்த அவரது மகன் வெங்கடேசன், அவரை ஆற்றுப் படுத்தினார். அமைச்சரின் மனைவி பவானி விருத்தாசலத்தில் உள்ள அவரது வீட்டில் கடந்த 2021-ம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT