மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகள் நிறைவு பெற்றநிலையில், இன்று (மார்ச் 5) சத்தமில்லாமல் பூமி பூஜை நடந்து கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளது. ஆனால், மக்கள் பிரதிநிதிகள் யாரையும் அழைக்காமல் நிகழ்ச்சியை நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை தோப்பூரில் 222 ஏக்கரில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு கடந்த 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்து, 2019 ஜனவரியில் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. நாடு முழுவதும் மற்ற எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு நேரடியாக நிதி ஒதுக்கிய நிலையில் மதுரை 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு மட்டும் ஜப்பான் பன்னாட்டு நிதி நிறுவனமான ஜைக்காவிடம் கடன் பெறுவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது.
மத்திய அரசு நேரடியாக நிதி ஒதுக்கிய பிற 'எய்ம்ஸ்' மருத்துவமனைகளை சமீபத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஆனால், ஜைக்கா நிறுவனம் கடன் வழங்கும் மதுரை 'எய்ம்ஸ்' மருத்துவமனை கட்டுமானப்பணி தொடங்கவில்லை. அதனால், 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கான திட்ட மதிப்பீடு பல முறை உயர்ந்து, தற்போது கட்டுமானப் பணிக்கு ரூ.1977.8 கோடி திட்ட மதிப்பீடு தயாராகி உள்ளது. அதில் 82 சதவீதம் தொகையான ரூ1627.70 கோடிகளை ஜைக்கா நிறுவனம் மூலம் கடனாக பெறப்படும் எனவும், மீதமுள்ள தொகையை மத்திய அரசு வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த மக்களவைத் தேர்தலுக்கு சில மாதம் முன்தான், பிரதமர் மோடி, மதுரை 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி சென்றார். தற்போது அடுத்த மக்களவைத் தேர்தலே வந்துவிட்டநிலையில் கடந்த 17 ஆகஸ்ட் 2023 அன்று மருத்துவமனை கட்டுமானத்துக்கான டெண்டர் அறிவிப்பை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டது. தற்போது பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி ஐந்து ஆண்டு நிறைவு பெற்றநிலையில், சமீபத்தில் மதுரைக்கு அவர் வந்த நிலையில் 'எய்ம்ஸ்' மருத்துவமனையை சுட்டிக்காட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மற்ற எதிர்கட்சிகள் மத்திய அரசு மீது குற்றம்சாட்டினர். விரைவில் மக்களவைத் தேர்தல் வரும்நிலையில், திமுக மற்றும் கட்சிகளின் விமர்சனம் அக்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.
அதனால், கடந்த சில நாட்களுக்கு முன் தோப்பூரில் மருத்துவமனை கட்டுமானத்திற்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. தற்போது அத்துறை ஒப்புதல் கிடைக்கப்பெற்ற நிலையில், டெண்டர் எடுத்த எல் அன்ட் டி நிறுவனம், தோப்பூரில் சத்தமில்லாமல் 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கான பூமிபூஜையை இன்று நடத்தியது. உடனடியாக நிலத்தை சமப்படுத்தி கட்டுமானத்தை தொடங்குவதற்கான பணிகள் தொடங்கியது. 'எய்ம்ஸ்' நிர்வாக இயக்குநர் நிர்வாக இயக்குநர் ஹனுமந்த ராவ் மற்றும் சில மத்திய அரசு அதிகாரிகள் மட்டும் பங்கேற்றனர்.
கடந்த 2015-ம் ஆண்டு 'எய்ம்ஸ்' மருத்துவமனை தமிழகத்துக்கு அறிவித்தது முதல் தற்போது வரை பல்வேறு சர்ச்சைகள் எழுந்துவந்த நிலையில் கட்டுமானப் பணிகள் இன்று தொடங்கியது தென்மாவட்ட மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அதேநேரத்தில் உள்ளூர் எம்பி, அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், ஆட்சியர் யாரையும் அழைக்காமல் பூமி பூஜையை நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ரகசிய திட்டமா 'எய்ம்ஸ்'? - மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கூறுகையில், ''ஒரு ரகசிய திட்டத்தைப்போல் மதுரை 'எய்ம்ஸ்' கட்டுமானப் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் எந்த நேரத்தில் தொடங்கி எந்தெந்த நேரத்தில் முடிக்கப்படும் என்ற விவரங்கள் (construction bar chart) கேட்டிருந்தோம். கண்டிப்பாக அந்த பட்டியிலில் தற்போது கட்டுமானப்பணி தொடங்குவதற்கான தேதி இருக்காது. உறுதியாக தேர்தலுக்கு பிந்தைய நாளாகதான் இருக்கக்கூடும்.
தற்போது தேர்தலுக்காக மக்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் ஏமாற்றுவதற்காக தேர்தல் நேரத்தில் பூமி பூஜை போட்டு கட்டுமானப் பணியை தொடங்குவதாக நாடகமாடுகின்றனர். அப்படியென்றால் கடந்த வாரம் மதுரைக்கு வந்த பிரதமர் மோடியை வைத்து தொடங்கி இருக்கலாமே?'' என்றார்.
அழைப்பு வரவில்லை; தொகுதி எம்.பி கவலை: காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கூறுகையில், ''என்னுடைய விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட மதுரை மாவட்டம் தோப்பூரில்தான் 'எய்ம்ஸ்' மருத்துவமனை வருகிறது. ஆனால், தொகுதி எம்.பியான என்னை யாரும் இன்று நடந்த 'எய்ம்ஸ்' பூமி பூஜை நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை. நான் உள்ளூரில்தான் இருந்தேன்.
கடந்த மக்களவைத் தேர்தல் நேரத்தில் அடிக்கல் நாட்டிய மோடி, தற்போது ஐந்து ஆண்டு கழித்து இந்த மக்களவைத் தேர்தல் வருகிறபோது பூமி பூஜை போட்டுள்ளார். அந்த இடத்தில் தற்போது வெறும் செங்கலை தவிர மற்ற எந்த கட்டுமானப் பணியும் நடக்கவில்லை. ஆனால், மதுரையுடன் அறிவித்த நாட்டின் பிற 'எய்ம்ஸ்' மருத்துவமனைகள் திறப்பு விழா கண்டுள்ளன.
தோப்பூருக்கு 3 கி.மீ., தொலைவில் உள்ள தாஜ் ஹோட்டலில் மதுரைக்கு சமீபத்தில் வந்த மோடி தங்கியிருந்தார். அப்போது அவர் தேர்தலுக்காக பூமி பூஜை நடத்தி கட்டுமானப் பணிகள் நடப்பதுபோன்ற தோற்றத்தை உருவாக்க திட்டம் போட்டிருக்கலாம். அதை நாடகத்தை இன்று நடைமுறைப்படுத்தியுள்ளனர்'' என்றார்.