மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. 2019 ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய நிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி ஜனவரி 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டும் போது 45 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்று உறுதியளித்து இருந்தார். மக்களவைத் தேர்தல் வாக்குறுதியாக கூறிய அவர், 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கவிட்ட நிலையில் தற்போது வரை கட்டுமானப் பணியை தொடங்க நடவடிக்கை எடுக்கவில்லை.
பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி இரண்டேகால் வருடங்கள் கழித்துதான், கடன் ஒப்பந்தம் மார்ச் 2021ல் செய்யப்பட்டது. கடன் ஒப்பந்தம் கையெழுத்தான உடன் பணி தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வரை மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை. தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்துக்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், இன்று எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. பூமி பூஜையுடன் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டிய நிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதை கடுமையாக விமர்சித்துள்ளார் மதுரை எம்பி சு.வெங்கடேசன்.
இதுதொடர்பாக சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில், “ஒரு ரகசிய திட்டத்தைப் போல மதுரை எய்ம்ஸின் கட்டுமானப் பணி இன்று துவக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பிரதமர் மதுரைக்கு வந்தார். அப்பொழுது அவரை வைத்து துவக்கி இருக்கலாம். அடிக்கல் நாட்டு விழாவுக்கும் திட்டத்தின் துவக்க நிகழ்வுக்கும் இடையே 5 ஆண்டு என்ற புதிய சாதனையை தேசம் அறிந்திருக்கும்.” என்று விமர்சித்துள்ளார்.