தேஜகூட்டணி சார்பில் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் பாஜக போட்டியிடப் போவது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதால், என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணிக்குத்தான் பாதகம் என இண்டியா கூட்டணி கட்சியினர் கருதுகின்றனர்.
ஒரு எம்எல்ஏக்கள்கூட இல்லாததால் அதிமுகவின் பலம் குன்றியுள்ளது. 3-வது அணியாக அதிமுக களம் கண்டாலும், அது அரசுக்கு எதிரான வாக்குகளை பிரிக்கவே செய்யும். அது தங்களுக்கே சாதகமாக அமையும் என ஆளும் கூட்டணியினர் (என்.ஆர்.காங் - பாஜக) கருதுகின்றனர்.
4 மாதங்களாக அமைச்சர் இல்லை: காரைக்கால் பிராந்தியத்தைச் சேர்ந்த என்.ஆர்.காங். எம்எல்ஏவான சந்திர பிரியங்கா, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு 4 மாதங்களாகியும், புதிய அமைச்சர் நியமிக்கப்படவில்லை. இதனால் தங்கள் பிராந்தியம் ஒதுக்கப்படுவதாக காரைக்கால் பகுதியிலிருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த பிரச்சினைகளோடு, மாநில அந்தஸ்தை வலியுறுத்தி என்.ஆர்.காங்கிரஸை தொடங்கிய முதல்வர் ரங்கசாமி, மத்தியில் பலத்துடன் ஆட்சியில் இருக்கும் பாஜகவிடம் கூட்டணி அமைத்தும் அதை வலியுறுத்தி பெறாமல் இருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.
மத்திய நிதி கமிஷனில் புதுச்சேரியை சேர்க்காதது, ஏறக்குறைய 5 ஆண்டுகளாக ரேஷன் கடைகள் மூடி கிடப்பது, புதுச்சேரி அரசின் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்யாதது ஆகிய பிரச்சினைகள் பாஜகவுக்கு சவாலாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இதையெல்லாம் பாஜக எப்படி சமாளிக்கப் போகிறது என்பது அக்கட்சி அறிவிக்கப்போகும் வேட்பாளர், என்.ஆர்.காங்கிரஸின் ஒத்துழைப்பு ஆகியவற்றை பொருத்து அமையும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.