சென்னை: போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதாக திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை, மாணவர் அணி, மகளிர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மார்ச் 4-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை மாவட்ட அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை, மாணவர் அணி, மகளிர் அணி சார்பில் கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், திமுக அரசுக்கு எதிராகவும், தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை தடுத்து, இளைஞர்களை பாதுகாக்க கோரியும், போதைப் பொருள் வழக்கில் தேடப்பட்டு வரும்திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர்சாதிக்கை கைது செய்ய வலியுறுத்தியும் அதிமுகவினர் கோஷம் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, மாவட்டச் செயலாளர்கள் ஆதிராஜாராம், பாலகங்கா, ஆர்.எஸ்.ராஜேஷ், விருகை ரவி, டி.ஜி.வெங்கடேஷ்பாபு, வேளச்சேரி அசோக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதேபோல, திருவள்ளூரில் முன்னாள் அமைச்சர்கள் மாதவரம் மூர்த்தி, பி.வி.ரமணா, பா.பெஞ்சமின், செங்கல்பட்டில் பா.வளர்மதி, காஞ்சிபுரத்தில் வி.சோமசுந்தரம், திருவண்ணாமலையில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சேவூர் ராமச்சந்திரன், திருப்பத்தூரில் கே.சி.வீரமணி, விழுப்புரத்தில் சி.வி.சண்முகம், கடலூரில் எம்.சி.சம்பத், கிருஷ்ணகிரியில் கே.பி.முனுசாமி, தருமபுரியில் கே.பி.அன்பழகன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோட்டில் செங்கோட்டையன், கருப்பணன், கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நாகப்பட்டினத்தில் ஓ.எஸ்.மணியன், கன்னியாகுமரியில் தளவாய் சுந்தரம், தூத்துக்குடியில் கடம்பூர் ராஜு, மதுரையில் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், விருதுநகரில் ராஜேந்திர பாலாஜி, கோவையில் எஸ்.பி.வேலுமணி, நாமக்கல்லில் பி.தங்கமணி, திண்டுக்கலில் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று, திமுக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.