வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதி உட்பட 3 தொகுதிகளில் போட்டியிட பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி (ஐஜேகே) விருப்பம் தெரிவித்துள்ளது. தற்போது, பெரம்பலூர் தொகுதி மட்டும் உறுதியாகி உள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய ஜனநாயக கட்சி 2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டது.
அக்கட்சியின் பாரிவேந்தர் வெற்றிபெற்றார். இந்த முறை பாஜகவுடனான கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட உள்ளார். இது குறித்து இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் ஐஜேகே நிறுவனத்தலைவர் பாரிவேந்தர் போட்டியிட உள்ளார்.
இதுதவிர, கள்ளக்குறிச்சி தொகுதியில் பொதுச்செயலாளரர் ஜெயசீலன், தென் சென்னையில் மற்றொருவர் போட்டியிட திட்டமிடப்பட்டுள்ளது. பெரம்பலூர் தொகுதி உறுதியாகிவிட்டது. மற்ற 2 தொகுதிகள் எங்கள் கட்சிக்கு உறுதியாகவில்லை. உறுதியானபிறகு, முறைப்படி அறிவிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.