இடம் வேலூர் | படம்: சி.வெங்கடாசலபதி 
தமிழகம்

போலியோ சொட்டு மருந்துபோட 43,051 முகாம்கள் - பெற்றோர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

சென்னை: "போலியோ சொட்டு மருந்து முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தவறாமல் சொட்டு மருந்து வழங்குங்கள். நலமான குழந்தைகளே வளமான எதிர்காலத்துக்கான ஒளி" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், "அன்பார்ந்த பெற்றோர்களே ஓர் வேண்டுகோள்! போலியோ இல்லாச் சமுதாயம் தொடர, இன்றைய போலியோ சொட்டு மருந்து முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தவறாமல் சொட்டு மருந்து வழங்குங்கள். நலமான குழந்தைகளே வளமான எதிர்காலத்துக்கான ஒளி!" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, தமிழகத்தில் இன்று நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாம்களில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் முகாம்களில், 57.84லட்சம் குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43,051 மையங்களில் முகாம்கள் நடைபெறுகின்றன. மேலும், பேருந்து, ரயில் மற்றும் விமான நிலையங்கள், சோதனைச்சாவடிகளிலும் சொட்டுமருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டுமருந்து வழங்கப்படுகிறது.

SCROLL FOR NEXT