தமிழகம்

“யாரையும் நம்பி பாஜக இல்லை” - குஷ்பு சிறப்புப் பேட்டி

துரை விஜயராஜ்

சென்னை: தமிழகத்தில் பாஜக யாரையும் நம்பி இல்லை என்றும், மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும் என்றும் குஷ்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கூறியதாவது:

அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தே.ஜ. கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில் சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் பாஜகவால் வெற்றி பெற முடியுமா?

சிறிய கட்சி, பெரிய கட்சி என்பது முக்கியம் இல்லை. மக்களுக்கு சேவை செய்ய யார் தயாராக இருக்கிறார்கள் என்பது தான் முக்கியம். அமித் ஷா சொல்லியதுபோல கூட்டணி கதவுகள் எப்போதும் அதிமுகவுக்காக திறந்திருக்கிறது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் கூட்டணியில் இணையலாம். பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரும் போதெல்லாம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை பற்றி பெருமையாக பேசுகிறார். எனவே, பாஜக கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.

தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை நம்பிதான் பாஜக இருப்பதாக திருமாவளவன் கூறுகிறாரே..?

அதிமுக, திமுக துணை இல்லாமல் ஒரு தேர்தலையாவது திருமாவளவன் சந்தித்தது உண்டா, மற்றவர்களின் தயவில்தான் விசிக சவாரி செய்து கொண்டிருக்கிறது. ஆனால், பாஜக யாரை நம்பியும் இல்லை.

கடந்த காலத்தில் நல்ல ஆளும் கட்சியாக இருக்க முடியாத பாஜக, எதிர்காலத்தில் நல்ல எதிர்க்கட்சியாக இருக்க முதல்வர் வாழ்த்து கூறியிருக்கிறாரே..

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுக்கு ஆதரவு கிடையாது என்று மம்தா கூறிவிட்டார். ராகுல்காந்தி தொகுதி என்று தெரிந்தும் வயநாட்டில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். அப்படி என்றால் ராகுல் காந்தி எங்கே நிற்க போகிறார். பிரதமர் மோடிக்கு எதிராக அவர்கள் ஒரு முகத்தை காட்டட்டும். பிறகு ஆளும் கட்சியா, எதிர்க்கட்சியா என்பதை பேசட்டும்.

தமிழகத்தில் பாஜக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்துள்ளது?

பாஜக நிச்சயம் அமோக வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் வேலை செய்து கொண்டிருக்கிறோம். நம்பிக்கைதான் எங்களது பலம். அதனால் பொறுத்திருந்து பாருங்கள்.

மக்களவைத் தேர்தலில் எந்தத் தொகுதியில் வேட்பாளராக களம் இறங்க போகிறீர்கள்?

அமித் ஷா, மோடி, நட்டா என்ன முடிவு செய்கிறார்களோ அதுதான் முக்கியம். என்னை தேர்தலில் போட்டியிட சொன்னால் நான் போட்டியிடுவேன். பிரச்சாரம் செய்யச் சொன்னால் செய்வேன். பாஜக வெற்றி பெற வேண்டும் என்பதுதான் முக்கியம். மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT