சென்னை: “மக்களவைத் தேர்தலில் திமுகவிடம் ஒரு தொகுதி கேட்டுள்ளோம். விரைவில் நல்ல செய்தி வரும்" என்று திமுக உடனான முதல்கட்ட தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பிறகு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
திமுக உடனான முதல்கட்ட தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பிறகு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “டிஆர் பாலு தலைமையிலான திமுக குழுவுடன் மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினோம். 2013 மாநிலங்களவைத் தேர்தல் முதல் திமுக கூட்டணியுடன் உடன் தொடர்ந்து செயல்பட்டு வந்துகொண்டிருக்கிறோம். இந்த மக்களவைத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்க வேண்டும் என்று மிக அழுத்தமாகவே சொல்லியிருக்கிறோம். எங்கள் கோரிக்கையை திமுக கேட்டுக்கொண்டது. முதல்வர் ஸ்டாலினிடம் எங்கள் கோரிக்கையை தெரிவிப்பதாக கூறினார்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும், இந்தியா முழுவதும் சமூக நல்லிணக்கம், சமூக நீதி மேலோங்கி இருக்க வேண்டும் என்பதில் எந்தவித சமரசத்துக்கும் இடம் கொடுக்காமல் மனிதநேய மக்கள் கட்சி இயங்கி வருகிறது. இந்த அடிப்படையில் தான் இண்டியா கூட்டணி வலுவாக உள்ளது. இண்டியா கூட்டணியில் எந்தவித சிக்கலும் இல்லாமல், வட இந்தியாவில் தொகுதி பங்கீடுகள் முடிந்துள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை முதல்வர் ஸ்டாலின் இண்டியா கூட்டணி வலுப்பெற உதவி புரிந்துள்ளார். எனவே வரும் மக்களவைத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி பொறுத்தவரை இண்டியா கூட்டணிக்கு ஆதரவாகவே செயல்படும். விரைவில் நல்ல செய்தி வரும்.
எந்தத் தொகுதியை கொடுத்தாலும் போட்டியிடுவோம். மிக அழுத்தமாக எங்களுக்கு தொகுதி தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். தொகுதி கிடைக்கும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கிறோம்.” என்று தெரிவித்தார்.