தமிழகம்

பிரேமலதாவுடன் அதிமுக பேச்சு: உடன்பாடு எட்டப்பட்டதாக தகவல்

செய்திப்பிரிவு

மக்களவைத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் அதிமுக - தேமுதிக இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவை சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, கே.பி.அன்பழகன், பி.பெஞ்சமின் ஆகியோர் நேற்று மாலை சந்தித்தனர்.

இந்த சந்திப்பின்போது தேமுதிக துணைச் செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், ப.பார்த்தசாரதி ஆகியோர் இருந்தனர். சுமார் 25 நிமிடங்கள் நடைபெற்ற சந்திப்பில் உடன்பாடு ஏற்பட்டு உள்ளதாகவும் ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

இதுகுறித்து வேலுமணி செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘‘நேரடியாக வந்து சந்தித்து பேசியுள்ளோம். குழு அமைத்த பின்னர் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும்’’ என்றார். இதுகுறித்து தேமுதிக நிர்வாகிகள் சிலர் கூறும்போது‘‘ 7 மக்களவை மற்றும் 1 மாநிலங்களவை இடங்கள் வேண்டும் என அதிமுக, பாஜக தரப்பில் பேச்சு நடத்தப்பட்டது. அதிமுக கூட்டணியை பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் விரும்புகின்றனர்.

அதிமுக தரப்பில் அதிகபட்சம் 4 அல்லது 5 மக்களவை இடங்கள் ஒதுக்கவும், தேர்தலுக்கு பின்னர் மாநிலங்களவை இடம் குறித்து பேசலாம் என்று தெரிவித்துவிட்டனர். அவர்களிடம் சாதமான தொகுதிகள் பட்டியலும் தரப்பட்டுள்ளது’’ என்றனர்.

அதிமுக விருப்ப மனு நீட்டிப்பு இதனிடையே அதிமுகவில் சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகிகம் அளிக்க பிப்.21 முதல் மார்ச் 1-ம் தேதி வரை கால அவகாசம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நிர்வாகிகள், தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று விருப்பமனு விநியோகம் மார்ச் 6-ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்படுவதாக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT