தமிழகம்

விபத்துக்குள்ளான காங். பெண் நிர்வாகி மரணம்: செல்வப்பெருந்தகை இரங்கல்

செய்திப்பிரிவு

சென்னை: விபத்தில் சிக்கி உயிரிழந்த காங்கிரஸ் கட்சியின் பெண் நிர்வாகிக்கு, கட்சியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளரும், சமூக செயற்பாட்டாளருமான கவுரி கோபால், சென்னை பூந்தமல்லியில் வசித்து வந்தார்.

கடந்த பிப்.21-ம் தேதி கட்சியின் மாநில தலைவராக கு.செல்வப்பெருந்தகை பொறுப்பேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர், வேறு ஒரு நிகழ்ச்சிக்காக சென்றுவிட்டு வீடு திரும்பும்போது பட்டாபிராம் அருகே கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவுரி கோபால், நேற்று உயிரிழந்தார். இதையடுத்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, நேற்று மாலை கவுரி கோபால் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘கவுரி கோபால், காங்கிரஸ் மீது அளவற்ற பற்று கொண்டவர். தலைமை கட்டளையிடும் அனைத்து போராட்டங்களிலும், நிகழ்ச்சிகளிலும் மிகுந்த ஆர்வத்தோடு பங்கேற்கும் ஒரு போராளி. அவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கும், தொண்டர்களுக்கும் ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும்’ என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT