சென்னை: ஊர்காவல் படையினருக்கு விரிவு படுத்தப்பட்டுள்ள மருத்துவ உதவி திட்டத்தை சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று தொடங்கி வைத்தார். போலீஸாருடன் இணைந்து ஊர்காவல் படையினரும் பணியாற்றி வருகின்றனர்.
குறிப்பாக பாதுகாப்புப் பணிகள், ரோந்துப் பணிகள், கோயில் திருவிழாக்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் ஊர்காவல் படையினர் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.
போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலும் அவ்வப்போது ஈடுபடுத்தப்படுகின்றனர். அந்த வகையில் சென்னையில் 2,329 ஊர்காவல் படையினர் (ஆண்கள்-2054, பெண்கள்-275) பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில், போலீஸாருடன் ஒருங்கிணைந்து பணியாற்றும் ஊர்காவல் படையினருக்கும் காவல் மருத்துவமனையில் இலவச சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது.
இந்நிலையில், 21.04.2023 அன்று நடந்த காவல் துறை மானியக் கோரிக்கையின் போது ``காவல் மருத்துவமனையில், ஊர்காவல் படையினரும் சிகிச்சை பெறும் வசதி விரிவுபடுத்தப்படும்'' என சட்டப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். கடந்த மாதம் 22-ம் தேதி இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக எழும்பூர், காவலர் மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கலந்து கொண்டு, சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் ஊர்காவல் படையினரும் எழும்பூர், காவலர் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ள மருத்துவ உதவி திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறுகையில், ``ஊர்காவல் படையினர் காவல் மருத்துவமனையில் அனைத்து வகையான மருத்துவ உதவிகளையும் பெற்றுக் கொள்ளலாம். மேலும், போலீஸார் போன்று, காவல் பல்பொருள் அங்காடியில் அவர்கள் பொருட்களை வாங்குவதற்கும் அனுமதி வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட்டு, அதற்கான அடையாள அட்டை விரைவில் வழங்கப்படும்'' என்றார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை காவல் கூடுதல் ஆணையர் (தலைமையிடம்) கபில்குமார் சி.சரத்கர், இணை ஆணையர் கயல்விழி, எழும்பூர் காவல் மருத்துவமனை முதன்மை மருத்துவ அதிகாரி கே.வி.மதுபிரசாத், ஊர்காவல் படை கூடுதல் ஊரக தளபதி மஞ்சித்சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்.