விழுப்புரம் அருகே பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக புகார் எழுந்துள்ள சம்பவத்தில் தலித் தாய், சிறுமியின் தலையில் பலத்த காயம் காரணமாக ஜிப்மரில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிறுமி ஆபத்தான நிலையில் இருப்பதால் நரம்பியல் நிபுணர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
விழுப்பும் திருக்கோவிலூர் அருகே வெள்ளம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலைக்கு மனைவி (ஆராயி) இரு குழந்தைகள் இருந்தனர். இதில் மகள் 8ம் வகுப்பு படித்து வருகிறார். மகன் 4ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 21ம் தேதி இவரது வீட்டில் நுழைந்த கும்பல் மனைவி, மகள், மகன் ஆகியோரை தாக்கியதில் சிறுவன் சமயன் உயிரிழந்தார்.
இச்சம்பவத்தின் போது ஏழுமலையின் மனைவி, மகள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாய் மற்றும் அவரது மகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவ கண்காணிப்பு அதிகாரி அசோக் சங்கரராவ் படேலிடம் கேட்டபோது, "ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டது முதல் என்ன நிலையில் இருந்தனரோ அதே நிலையில் தான் தற்போது உள்ளனர்., தலையில் பலத்த அடி பட்டுள்ளதால் எப்போது நினைவு திரும்பும் என்று கூறமுடியாது. பாலியல் பலாத்காரம் நடந்துள்ளதா என்பது விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என்றார்...
எங்கு சிகிச்சை?
தாயும், சிறுமியும் தனித்தனி வார்டுகளில் சிகிச்சையில் உள்ளனர். அவர்கள் நிலைத்தொடர்பாக மருத்துவமனை வட்டாரங்களில் விசாரித்தபோது, "அவசர சிகிச்சை பிரிவின் மூன்றாவது தளத்தில் சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார். அவரது தலையில் பலத்த காயம் உள்ளதால் காதில் ரத்தக்கசிவு உள்ளது. அதை கட்டுப்படுத்த முதுகில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அதேபோல் காதிலும் சிறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சுயநினைவு இல்லாமல் தன்னிச்சையாக கை, கால்களை அசைக்கிறார். அதனால் அதை கட்டி வைத்து சிகிச்சை தருகிறோம். அவரது தாய் நான்காவது தளத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மூக்கில் குழாய் பொருத்தி திரவ உணவு தரப்படுகிறது. சிகிச்சைக்காக இருவரின் தலையிலும் முடி நீக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, புதுச்சேரி தெற்கு மாநில திமுக அமைப்பாளர் சிவா எம்எல்ஏ ஆகியோர் ஜிப்மர் வந்தனர். சிகிச்சை தொடர்பாக மருத்துவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தனர்.