நெல்லை: தனது வார்டில் மாநகராட்சிப் பணிகள் எதுவும் நடைபெறாததால், பதவியை ராஜினாமா செய்வதாக கூறி 7-வது வார்டு கவுன்சிலர் இந்திராமணி, மாநகராட்சி ஆணையரிடம் கடிதம் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாநகராட்சியின் 7-வது வார்டு திமுக கவுன்சிலர் இந்திராமணி. இவர் வெள்ளிக்கிழமை தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி, மாநகராட்சி ஆணையரிடம் கடிதம் கொடுத்தார். பின்னர், கவுன்சிலர் இந்திராமணி ஆணையரின் அறைக்கு வெளியே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், “எனது 7-வது வார்டு பகுதியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எந்தப் பணிகளும் நடைபெறவில்லை.
பள்ளிக் கட்டிடப் பணிகள் நடைபெறாததால், குழந்தைகள் சிரமப்படுகின்றனர். இப்படியிருந்தால், பொதுமக்களுக்கு எப்படி பதில் சொல்ல முடியும்? எம்.பி. தேர்தலுக்கு எப்படி வாக்கு கேட்டுப்போக முடியும்? சாலைப் பணிகள் தொடர்பான ஒரு பைஃலைத் தூக்கி மறைத்து வைத்துள்ளனர். இன்றுவரை அந்த சாலைப் பணிகள் நடைபெறவில்லை. பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் லஞ்சம் கேட்கின்றனர்” என்று கூறினார். இதனால் நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக, நெல்லை மாநகர ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் கூறும்போது, "மாமன்ற உறுப்பினர், என்னிடம் இந்தக் கடிதத்தைக் கொடுப்பது தவறு. நெல்லை மாநகர மேயரிடம்தான், கவுன்சிலர் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுக்க வேண்டும்.
கடந்த ஓராண்டில், 7-வது வார்டில் சாலை உள்ளிட்ட 8 பணிகள், ரூ.90 லட்சம் மதிப்பில் நிறைவு பெற்றுள்ளது. கல்வி நிதியிலிருந்து ரூ.1 கோடி மதிப்பீட்டில், பள்ளிக் கட்டிடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மழையின் காரணமாக பணிகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. ஏற்க்குறைய பாதியளவு பணிகள் முடிவுற்றது. வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில், பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
மேலும், அந்த வார்டில் மேற்கொள்ளப்படவுள்ள ரூ.1.90 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு டெண்டர்களும் தயார் நிலையில் உள்ளன. எனவே, வார்டில் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்று கவுன்சிலர் இந்திராமணி கூறியிருப்பது தவறு" என்று கவுன்சிலரின் குற்றச்சாட்டுகளுக்கு ஆணையர் மறுப்பு தெரிவித்துள்ளார்.