சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட முடியாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதற்கு வரவேற்பு தெரிவித்து முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் கூறியிருப்பதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நமது அரசு முன்வைத்த வலுவான வாதங்களால், ஆலை நிர்வாகத்தின் அனைத்து விளக்கங்களும் நொறுங்கி, ஆலையை மூடியது சரியே என்று உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. நச்சு ஆலைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிய மக்களுக்கும், நமது அரசின் வலிமையான சட்டப் போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி இது. எத்தகைய ஆபத்தில் இருந்தும் மக்களைக் காப்போம்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பானது, ஆலையை மூடுவதற்கான மக்களின் போராட்டத்துக்கும், 28 ஆண்டு கால மதிமுகவின் போராட்டத்துக்கும் கிடைத்த வெற்றி.13 உயிர்கள் பறிபோனதற்கு உச்சநீதிமன்றத்தில் உரிய நீதி கிடைத்துள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ்: ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என பல ஆண்டுகளாக பாமக போராடி வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.
கனிமொழி எம்.பி.: தூத்துக்குடி மக்களின் பல நாள் போராட்டத்தின் வெற்றிதான் உச்ச நீதிமன்ற தீர்ப்பு. மக்களுடன் நின்ற தமிழக முதல்வருக்கு நன்றி.
தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: போராடிய மக்களின் உண்மையான உணர்வுக்கு கிடைத்த வெற்றி. தமிழக அரசு வழக்கறிஞர்களின் வாதத் திறமையால் தீர்ப்பு சாத்தியமாகியது.
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை முழு மனதோடு வரவேற்கிறோம். சிறப்பான வாதங்களை எடுத்து வைத்த தமிழக அரசுக்கும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், அரசின் சார்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர்களுக்கும் பாராட்டுகள். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.