தமிழகம்

தமிழகம் முழுக்க 60 ஆயிரம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை: ராம கோபாலன் பேட்டி

செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் 60 ஆயிரம் இடங்களில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் என்று அந்த அமைப்பின் நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது:

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் 60 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய திட்டமிட்டுள்ளோம். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள குடியிருப்பு பகுதிகளில் சிலைகளை வைக்க காவல்துறை அனுமதி இதுவரை மறுத்துவந்தது. இந்நிலையில், கடந்த 25-ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில் புதிய குடியிருப்புகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி கிடைத்துள்ளது.

விநாயகர் சதுர்த்தியன்று சிலைகளை வைத்து வழிபடுவது என்பது மதவாதம் கிடையாது. இது, இந்துக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து கொண்டாடப்படும் விழாவாகும்.

சென்னையில் இந்த ஆண்டு 5,507 இடங்களில் சிலைகளை வைக்க முடிவு செய்துள்ளோம். இந்த சிலைகளை செப்டம்பர் 7-ம் தேதி பட்டினப்பாக்கம் அருகே கடலில் கரைக்க முடிவு செய்துள்ளோம். திருவல் லிக்கேணி திருவட்டீஸ்வரன் பேட்டை வழியாக விநாயகர் ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அந்த வழியாக ஊர்வலம் நடத்த முதல்வர் அனுமதி வழங்குவார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு ராம கோபாலன் கூறினார்.

SCROLL FOR NEXT