தமாகாவில் இருந்து விலகியவர்கள் நாகர்கோவிலில் விஜய் வசந்த் எம்.பி. முன்னிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். 
தமிழகம்

“விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் காங். போட்டி” - விஜய் வசந்த் தகவல்

செய்திப்பிரிவு

நாகர்கோவில்: விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடும் என்று விஜய் வசந்த் எம்.பி. கூறினார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பொருளாளரும் மாநிலபொதுக்குழு உறுப்பினருமான டாக்டர் சிவகுமார் அக்கட்சியில் இருந்து விலகி நேற்று காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் விஜய் வசந்த் எம்பி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் தன்னை இணைத்துக் கொண்டார். அவருடன் தமாகாவில் இருந்து விலகிய 30-க்கும் மேற்பட்டோர் காங்கிரஸில் இணைந்தனர். நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகர தலைவர் நவீன்குமார், முன்னாள் மாவட்ட தலைவர் ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

பின்னர் செய்தியாளர்களிடம் விஜய் வசந்த் எம்பி. கூறியதாவது: காங்கிரஸ் கட்சி 138 ஆண்டுகளை கடந்த வலிமையான கட்சி. ஒரு சட்டப் பேரவை உறுப்பினர் விலகியதால் காங்கிரஸ் பலவீனம் ஆகிவிடும் என்பது உண்மையல்ல. ஒருவர் போனால் ஆயிரம் பேர் இணைவார்கள் என்பதற்கான எடுத்துக்காட்டு தான் இன்றைய நிகழ்வு. விளவங்கோடு தொகுதியில் மூன்று முறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இத்தொகுதி அமைந்திருக்கிறது. கண்டிப்பாக இந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இங்கு போட்டியிட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துவோம். நான் தூங்கி எழுவது முதல் காங்கிரஸ் கட்சியின் துண்டைதான் அணிந்து வருகிறேன். பாரம் பரியமான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த என்னை யாரும் தொடர்பு கொள்ள மாட்டார்கள். எல்லா வழிகளிலும் எனது உழைப்பை காங்கிரஸ் கட்சிக்காக அர்ப்பணிப்பேன்.

மத்திய அரசு வேலைவாய்ப்பு வழங்குவதாக வாக்குறுதி அளித்து அதை நிறைவேற்றாவிட்டாலும் மாநில அரசு 3 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்திருக்கிறது. மத்திய அரசு எதை தடுத்தாலும் மாநில அரசு அதனை தன்னால் இயன்ற அளவு செய்து வருகிறது.

பதவிக்காக இணைந்துள்ளார்: எதுவும் செய்யவில்லை, எதுவும் கொண்டு வரவில்லை என்று சொல்லும் மத்திய அரசு முதலில் தமிழகத்துக்கான ஜிஎஸ்டி நிலுவை தொகையை கொடுக்கட்டும். நாம் கேட்டுள்ள தேசிய பேரிடர் நிவாரண நிதியை வழங்க வேண்டும். காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை என்றால் விஜயதாரணி 3 முறை எம்எல்ஏவாக இருந்திருக்க முடியாது. அவர் கேட்கும் பதவியை எல்லாம் கொடுக்க முடியாது.

இப்போது கூட அவர் வேறொரு பதவி வேண்டும் என்பதற்காகத் தான் வேறு கட்சியில் இணைந்துள்ளார். கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. பாஜகவில் பாதுகாப்பு இருக்கிறதா என்பது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. உண்மை என்ன என்பது விரைவில் வெளியில் வரும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT