வேலூர்: மக்களவைத் தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய வேலூர் பிரகடனம் என்றஇயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாகப் பேராசிரியர் ராம.மணிவண்ணன் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தல் தொடர்பாக சென்னை பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ராம.மணி வண்ணன் வேலூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘இந்திய வரலாற்றில் வேலூர் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்துள்ளது. தென்னிந்திய வரலாற்றை மட்டுமல்ல இந்திய வரலாற்றையே புரட்டிப்போட்ட சரித்திரம் வேலூருக்கு உண்டு. வேலூரின் வரலாறும் அரசியல் நோக்கமும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது.
நாட்டில் தேர்தல் கலாச்சாரம் மாறிக்கொண்டே வருகிறது. 1970, 1980 ஆம் ஆண்டுகளில் வாக்குக்குப் பணம் என்பது மிகக் குறைவாகவே இருந்தது. அந்த நிலை தற்போது மாறி வாக்குக்கான பணத்துக்கு மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த நிலையும் மாறி பணம் வாங்கினாலும் மனசாட்சிப்படி வாக்களிக்கும் நிலை மாறியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 30 ஆண்டுகளில் அரசியல் வாதிகள் கல்வியாளர்களாக மாறியுள்ளனர். இதனால், தரமான கல்வியை அரசால் வழங்க முடியவில்லை.
அரசு பல்கலைக் கழகங்களில் நிர்வாக சீர்கேடு உள்ளது. ஆனால், 40 ஆயிரம் கோடி ரூபாய் லாபத்தில் டாஸ்மாக்கை அரசாங்கம் நடத்துகிறது. மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் யாரும் பிளவுபடக்கூடாது. அதேபோல், சாதி ரீதியாக வேட்பாளர்களை நிறுத்தக்கூடாது. மக்கள் பிரச்சினைகள் ஏராளமாக இருக்கும் போது மக்களவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலரும் கடை திறப்பு விழாவுக்குச் செல்வது வேதனையாக உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். சாதி, மதம் பார்க்காமல் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்.
இந்த நிலை மாற இளைஞர்கள், பெண்கள், மாணவர்களிடம் மாற்றம் வரவேண்டும். இதற்காக வரலாற்றுச் சிறப்பு மிக்க வேலூரிலிருந்து வேலூர் பிரகடனம் என்ற இயக்கத்தைத் தொடங்கி மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த உள்ளோம். ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வரும் மார்ச் மாதத்தில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை இந்த இயக்கத்தை முன்னெடுக்க உள்ளோம்’’ என்றார்.