திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, 12 வயது சிறுமியை நிலாவுக்கு மணமகளாக்கிய சடங்கு குழந்தைகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பியுசிஎல் அமைப்பைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான டி.நாகஷீலா கூறும்போது, "குழந்தைகளை தனிமைப்படுத்தி அவர்களை மணமகளாக முன்னிறுத்தும் எத்தைகைய சடங்காக இருந்தாலும் அது குழந்தைகள் உரிமைகளுக்கு விரோதமானது" எனக் கூறியுள்ளார்.
நிலாப்பெண் என்றால் என்ன?
பூப்படையாத பதின் பருவ சிறுமியைத் தேர்ந்தெடுத்து அவரை மூன்று ஆண்டுகளுக்கு நிலாப்பெண்ணாக நியமிக்கின்றனர்.
திண்டுக்கல் வேடசந்தூரில் உள்ள தெய்வநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரால் பின்பற்றப்படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் 7 நாட்களுக்கு இந்த சடங்கு நடைபெறுகிறது. தை முழுநிலவு நாளன்று இந்த சடங்கு நிறைவு பெறுகிறது. . இந்த ஆண்டு சந்திர கிரகணம் இருந்ததால் ஒரு நாள் முன்னதாகவே இச்சடங்கு முடிக்கப்பட்டுள்ளது.
நிலாப்பெண்ணாக தேர்ந்தெடுக்கப்படும் சிறுமிக்கு ஆவாரம் பூ மாலை அணிவித்து கிராமம் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் செல்கின்றனர். பின்னர், கோயிலில் பூஜை நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலாப்பெண் ஒரு குடிசைக்குள் அனுப்பப்படுகிறார். அன்றைய இரவு ஒலை குடிசைக்குள் தங்கும் சிறுமி மறுநாள் காலையில் விளக்கேற்றி அதை ஆற்றில் மிதக்க விடுகிறார். இத்துடன் இந்த சடங்கு நிறைவுபெறுகிறது
இச்சடங்கு குறித்து ஊர்க்காரர் ஒருவர் கூறும்போது, "இச்சடங்கை நிலாவை சாந்தப்படுத்தி ஊரில் உள்ள பெண் குழந்தைகளுக்கு நல்ல தேக ஆரோக்கியம் வழங்குவதற்காக நடத்துகிறோம். 5 தலைமுறைகளாக இந்த சடங்கு நடத்தப்படுகிறது" என்றார்.
இது தொடர்பாக குழந்தைகள் நல ஆர்வலர் வித்யாசாகர் கூறும்போது, "இந்த சடங்குக்கு உட்படுத்தப்படும் குழந்தை தனிமைப்படுத்தப்பட்டதாக வேதனைப்படும் மேலும் சக வயதினர் தரும் மன அழுத்தத்துக்கும் ஆளாகும்" என்றார்.
ஆனால், சென்னை பல்கலைக்கழகத்தின் கிரிமினாலஜி துறையைச் சேர்ந்த துணைப் பேராசிரியர் எம்.ப்ரியம்வதா கூறும்போது, "இத்தகைய நடைமுறைகளை முதலில் நன்கு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். ஒரு குழந்தையை வார்த்தைகளாலோ, உடல் ரீதியாகவோ, அல்லது மன ரீதியாகவோ துன்புறுத்தாத வரையில் உரிமை மீறலுக்கு இடமில்லை" என்றார்.
மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் எம்.பி.நிர்மலா, "இந்த சடங்கு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பதின் பருவ பெண் பூப்பெய்வதற்காகவே இந்த சடங்கு நடத்தப்படுகிறது" எனத் தெரிவித்தார்.
இருப்பினும், இத்தகைய சடங்குகளுக்கு குழந்தைகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.